

வங்கியில் கடன் பெறும்போது கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு என்பதை தெரிந்துகொள்வதில் பலரும் ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் நமது உடல் எந்த அளவுக்கு ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறது என்பதை ஒரு எண்ணில் சொல்லச் சொன்னால் பெரும்பாலானவர்களிடம் உடனடி பதில் இருக்காது. தினமும் எத்தனை அடிகள் நடந்தோம், எவ்வளவு நேரம் தூங்கினோம், உடற்பயிற்சியின்போது இதயத்துடிப்பு எவ்வளவு அதிகரித்தது போன்ற பல தகவல்களை ஸ்மார்ட்வாட்ச்கள் சேகரித்தாலும், அந்த எண்ணிக்கைகள் ஒட்டுமொத்த உடற்தகுதியை என்ன சொல்கின்றன என்பது பலருக்கும் தெளிவாக இருப்பதில்லை. இந்த இடைவெளியை நிரப்பும் வகையில், தனிநபரின் உடற்தகுதியை ஒருங்கிணைந்த மதிப்பெண்ணாக பார்க்கும் Fitness Index என்ற கருத்து கவனம் பெற்றுள்ளது.
உடற்பயிற்சியை வெறும் தினசரி செயல்பாடாக பார்க்காமல், அதன் தாக்கத்தை அளவிடுவதுதான் இந்த அணுகுமுறையின் முக்கிய நோக்கம். குறிப்பாக Samsung Health செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Fitness Index, ஒருவரின் உடற்தகுதியை பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிடுகிறது. உடல் அமைப்பு, இதய-நுரையீரல் செயல்திறன், தசை வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் உடல் நெகிழ்வுத்தன்மை என ஐந்து முக்கிய அம்சங்கள் இதில் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இதனால் “நான் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன்” என்ற பொதுவான எண்ணத்தைத் தாண்டி, உடலின் எந்தப் பகுதி நன்றாக செயல்படுகிறது, எதில் கூடுதல் கவனம் தேவை என்பதைக் புரிந்துகொள்ள முடியும்.
இதில் கார்டியோ உடற்தகுதி முக்கியமான அளவுகோலாக உள்ளது. உடற்பயிற்சி அல்லது வேகமான நடைப்பயிற்சியின் போது இதயம், நுரையீரல் மற்றும் தசைகள் எவ்வளவு திறம்பட இணைந்து செயல்படுகின்றன என்பதை இது பிரதிபலிக்க உதவுகிறது. அதேபோல் தசை வலிமை மற்றும் endurance எனப்படும் நீடித்த செயல்திறன் ஆகியவை உடலின் செயல்பாட்டு திறனை புரிந்துகொள்ள உதவுகின்றன. உடல் அமைப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மையும் சேர்ந்து பார்க்கப்படுவதால், வெறும் எடை குறைப்பை மட்டுமே உடற்தகுதியின் அளவுகோலாக கருதாமல் முழுமையான அணுகுமுறையை உருவாக்க முடிகிறது.
இந்த முறையில் மற்றொரு சுவாரஸ்யமான அம்சமும் உள்ளது. ஒருவரின் தரவுகள் தனியாக மதிப்பிடப்படுவதுடன், இதயத்துடிப்பு, VO2 max, தினசரி நடைப்பயிற்சி போன்ற அளவீடுகள் பிற பயனர்களின் தரவுகளுடன் ஒப்பிடப்பட்டு உடற்பயிற்சியின் செயல்திறனை புரிந்துகொள்ள உதவுகின்றன. இதன் மூலம் ஒருவர் தன்னுடைய உடற்தகுதியில் எந்தப் பகுதியில் முன்னிலையில் இருக்கிறார், எந்தப் பகுதியில் முன்னேற்றம் தேவைப்படுகிறது என்பதை அடையாளம் காண முடியும். இதுபோன்ற ஒப்பீடு, போட்டி மனப்பான்மையை உருவாக்குவதற்காக மட்டுமல்லாமல், தனிப்பட்ட இலக்குகளை அமைக்கவும் உதவக்கூடும்.
ஆனால் உடனடியாக ஒரு Fitness Index உருவாகிவிடாது. நம்பகமான அடிப்படை மதிப்பீட்டுக்கு கடந்த ஏழு நாட்களுக்கான போதுமான சுகாதாரத் தரவுகள் தேவைப்படுகின்றன. Galaxy Watch மூலம் குறைந்தது இரண்டு நாட்கள் தினசரி செயல்பாடுகளை பதிவு செய்தல், உடல் அமைப்பு தொடர்பான ஒரு அளவீட்டை பதிவு செய்தல், மேலும் குறைந்தது 10 நிமிட நடை அல்லது ஓட்டப் பயிற்சியை பதிவு செய்தல் போன்றவை அந்த அடிப்படைத் தரவுகளை உருவாக்க உதவுகின்றன. அதன் பிறகு தினசரி நடவடிக்கைகள் மற்றும் உடற்பயிற்சிகள் தொடர்ந்து அந்த மதிப்பீட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இதுபோன்ற தொழில்நுட்பம் உடற்பயிற்சி செய்யும் முறையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம். முன்பு ஸ்மார்ட்வாட்சில் ஆயிரக்கணக்கான தரவுகள் சேகரிக்கப்பட்டாலும், அவற்றை வைத்து என்ன செய்ய வேண்டும் என்பது பயனரின் பொறுப்பாக இருந்தது. தற்போது அந்தத் தரவுகளை ஒருங்கிணைத்து செயல்படக்கூடிய தகவலாக மாற்றும் முயற்சி அதிகரித்து வருகிறது. உதாரணமாக, நடைப்பயிற்சி தொடர்ந்து மேற்கொண்டால் உடற்தகுதியில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதை காலப்போக்கில் கண்காணிக்க முடியும். இதனால் உடற்பயிற்சி என்பது ஒருசில நாட்களுக்கு மட்டும் மேற்கொள்ளப்படும் முயற்சியாக இல்லாமல், தொடர்ந்து பின்பற்றக்கூடிய பழக்கமாக மாற வாய்ப்புள்ளது.
இருப்பினும், ஒரு Fitness Index மதிப்பெண் என்பது மருத்துவ பரிசோதனைக்கு மாற்றாக கருதப்படக்கூடாது. இந்த வகையான அம்சங்கள் பொதுவான wellness மற்றும் fitness பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டவை; எந்தவொரு நோயையும் கண்டறிதல், சிகிச்சை அளித்தல் அல்லது மருத்துவ நிலையை கண்காணிப்பதற்கான கருவியாக பயன்படுத்தக் கூடாது என்று அந்த சேவை தொடர்பான தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இன்றைய காலத்தில் நாம் தூக்கம் முதல் நடைப்பயிற்சி வரை ஏராளமான உடல்நலத் தரவுகளை சேகரித்து வருகிறோம். அடுத்த கட்டம் அந்தத் தரவுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது அல்ல. அவற்றின் அர்த்தத்தை புரிந்துகொண்டு சரியான மாற்றங்களை செய்வதுதான். உங்கள் உடலின் செயல்திறனை ஒரே பார்வையில் புரிந்துகொள்ள உதவும் Fitness Index போன்ற முயற்சிகள், “நான் எவ்வளவு உடற்பயிற்சி செய்கிறேன்?” என்ற கேள்வியைத் தாண்டி, “அந்த முயற்சியால் என் உடல் உண்மையில் எவ்வளவு முன்னேறுகிறது?” என்பதை கவனிக்கச் செய்யும் புதிய சிந்தனையாக மாறி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்