அரிசி மற்றும் மைதாவை ஓரம் கட்டுங்க! இத சாப்பிட்டா 100 வயசு வரைக்கும் வாழலாம்

நவீன கால உணவுகளால் ஏற்படும் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்குச் சிறந்த தீர்வாகச் சிறுதானியங்கள் அமைகின்றன.
அரிசி மற்றும் மைதாவை ஓரம் கட்டுங்க! இத சாப்பிட்டா 100 வயசு வரைக்கும் வாழலாம்
Published on
Updated on
2 min read

இன்றைய காலக்கட்டத்தில் நாம் சாப்பிடும் உணவுகளில் சத்துக்கள் குறைந்து கொண்டே வருகிறது. வெள்ளை அரிசி மற்றும் மைதா போன்ற பாலிஷ் செய்யப்பட்ட உணவுகளால் சுகர், பிபி போன்ற பிரச்சனைகள் மிக இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. இதற்கெல்லாம் ஒரு நிரந்தர தீர்வாக அமைவதுதான் நமது முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய சிறுதானிய உணவுகள். ராகி, கம்பு, திணை, வரகு, சாமை, குதிரைவாலி எனப் பல வகைகள் இதில் உள்ளன. இந்த தானியங்கள் ஒவ்வொன்றும் ஒரு ஊட்டச்சத்து பெட்டகம் என்றுதான் சொல்ல வேண்டும். அரிசி மற்றும் கோதுமையுடன் ஒப்பிடும்போது, சிறுதானியங்களில் நார்ச்சத்து மிக அதிகம். இது ஜீரண சக்தியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயராமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் டயபெடிஸ் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

குறிப்பாக ராகி எனப்படும் கேழ்வரகில் கால்சியம் சத்து அபரிமிதமாக உள்ளது. இது எலும்புகளுக்கு நல்ல வலுவைத் தரும். குழந்தைகளுக்கு ராகி கஞ்சி கொடுப்பது அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். அதேபோல் கம்பு உடல் சூட்டைத் தணிக்கும் குணம் கொண்டது. கோடை காலங்களில் கம்மங்கூழ் குடிப்பது உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் உடனடி ஆற்றலையும் தரும். திணை மற்றும் சாமை போன்ற தானியங்களில் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், ரத்த சோகை வராமல் தடுக்கிறது. இந்த தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது உடல் எடையைக் குறைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள சிக்கலான கார்போஹைட்ரேட் நீண்ட நேரத்திற்குப் பசியைக் கட்டுப்படுத்துவதால், தேவையற்ற ஜங்க் உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

முன்பெல்லாம் சிறுதானியங்கள் என்றால் வெறும் கஞ்சி அல்லது கூழ் மட்டும்தான் செய்ய முடியும் என்று நினைத்தார்கள். ஆனால் இப்போது டெக்னாலஜி வளர்ந்துவிட்ட நிலையில், சிறுதானியங்களை வைத்து இட்லி, தோசை, பொங்கல், உப்புமா, பிரியாணி என எல்லாவற்றையும் மிக ருசியாகச் செய்ய முடியும். அரிசிக்கு மாற்றாக வரகு அல்லது குதிரைவாலியைப் பயன்படுத்திச் சாதம் வடிக்கலாம். தோசை மாவு அரைக்கும்போது ஒரு பங்கு அரிசிக்கு பதில் சிறுதானியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் ருசியிலும் எந்த மாற்றமும் இருக்காது, அதேசமயம் முழுமையான ஆரோக்கியமும் கிடைக்கும். சிறுதானியங்களில் குளுட்டன்  இல்லாததால், அலர்ஜி பிரச்சனை உள்ளவர்களும் இதைத் தாராளமாகச் சாப்பிடலாம்.

இயற்கையிலேயே பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் தேவைப்படாமல் வளரக்கூடியவை இந்த சிறுதானியங்கள். அதனால் இதில் ரசாயனக் கலப்பு மிகக் குறைவாகவே இருக்கும். நமது பாரம்பரிய உணவுகளை நாம் மீண்டும் கையிலெடுப்பது நமது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, விவசாயிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நாம் செய்யும் மிகப்பெரிய உதவியாகும். தினமும் ஒருவேளையாவது சிறுதானிய உணவுகளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் மாரடைப்பு, உடல் பருமன் மற்றும் கேன்சர் போன்ற அபாயகரமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே, ஆரோக்கியமான வாழ்விற்குத் தடையற்ற எனர்ஜி தரக்கூடிய இந்த சூப்பர் ஃபுட்களை இன்றே உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com