
பச்சை மிளகாய் மட்டன் வறுவல், மட்டன் பிரியர்களுக்கு ஒரு அட்டகாசமான விருந்து. மிளகாய்த்தூளுக்குப் பதிலாக, பச்சை மிளகாயின் காரம், இந்த வறுவலுக்குத் தனித்துவமான சுவையைக் கொடுக்கும்.
ஆட்டுக்கறி - 1/2 கிலோ (எலும்பில்லாத சிறிய துண்டுகளாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 15 (அல்லது காரத்திற்கு ஏற்ப)
இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 10
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
முதலில், ஆட்டுக்கறியை நன்கு கழுவி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் 4-5 விசில் வரும் வரை வேகவிடுங்கள். மட்டன் நன்கு மிருதுவாக வெந்திருக்க வேண்டும்.
ஒரு மிக்ஸியில், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்து தனியாக எடுத்து வையுங்கள்.
ஒரு பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, சோம்பு, மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
கடுகு வெடித்ததும், நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
இப்போது, அரைத்து வைத்திருக்கும் பச்சை மிளகாய் மசாலா விழுதைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். மசாலா நன்கு வதங்கியதும், ஏற்கெனவே வேகவைத்த மட்டன் துண்டுகளை, அதிலிருந்து நீரை வடித்துவிட்டு, கடாயில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, மட்டன் துண்டுகளில் மசாலா நன்கு பிடிக்கும் வரை வதக்கவும். தேவைப்பட்டால், வேகவைத்த மட்டன் தண்ணீரை சிறிது சேர்த்து வதக்கலாம்.
மட்டன் துண்டுகள் நன்கு வறுபட்டு, மொறுமொறுப்பாக வரும் நேரத்தில், சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து, நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள். இப்போது, காரசாரமான, சுவையான பச்சை மிளகாய் மட்டன் வறுவல் ரெடி!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.