
சில அயிட்டங்களை நாம் பெரும்பாலும் வீட்டில் செய்வது கிடையாது. ஹோட்டல்களுக்கு செல்லும் போது மட்டும் ருசித்துப் பார்த்து விட்டுவிடுவோம். அப்படி ஒரு அயிட்டம் தான் மட்டன் கோலா உருண்டை. செட்டிநாடு சமையலில் மிகவும் பிரபலமான டிஷ் இது. இந்த கோலா உருண்டைகளை வீட்டிலேயே எளிமையாகச் செய்வது எப்படி என்று இங்குப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் கொத்துக்கறி (minced meat) - 250 கிராம்
பொட்டுக்கடலை மாவு - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1 (சிறியது, பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
புதினா இலை - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் - 2 முதல் 3
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 2
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
செய்முறை
முதலில், மட்டன் கொத்துக்கறியை நன்றாகக் கழுவி, அதில் தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மட்டனை எடுத்து, அதில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பிசைந்து வைக்கவும்.
ஒரு சிறிய கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும்.
பின்னர், தேங்காய் துருவல் மற்றும் கசகசா சேர்த்து, தேங்காய் பொன்னிறமாக மாறும் வரை வறுத்து அடுப்பை அணைக்கவும்.
வறுத்த இந்தக் கலவையை ஆறிய பிறகு, மிக்ஸியில் போட்டுத் தண்ணீர் சேர்க்காமல் பொடியாக அரைத்து எடுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் தயார் செய்து வைத்த மட்டன் கொத்துக்கறி, பொடியாக நறுக்கிய வெங்காயம், அரைத்த மசாலா பொடி, பொட்டுக்கடலை மாவு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் சேர்த்து, அனைத்துப் பொருட்களும் நன்றாகக் கலக்கும்படி பிசையவும்.
தேவைப்பட்டால், சிறிதளவு உப்பு சேர்க்கலாம். இந்தக் கலவை உருண்டை பிடிப்பதற்கு ஏற்ற பக்குவத்தில் இருக்க வேண்டும். மாவு தளர்ச்சியாக இருந்தால், சிறிது பொட்டுக்கடலை மாவு சேர்க்கலாம்.
பிசைந்து வைத்த மட்டன் கலவையில் இருந்து, சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளை உருட்டவும். உருண்டைகள் பிடிப்பதற்கு எளிதாக இருக்க, கையில் சிறிது எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாம்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும், தயார் செய்து வைத்த கோலா உருண்டைகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போடவும். கடாயில் அதிகமான உருண்டைகளைச் சேர்க்க வேண்டாம்.
உருண்டைகள் பொன்னிறமாக மாறி, மொறுமொறுப்பானதும், அதை எண்ணெயிலிருந்து வடிகட்டி, ஒரு பேப்பர் டவலில் வைக்கவும்.
இதோ! சுவையான மட்டன் கோலா உருண்டை தயார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.