
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் ஒரு ரகசியப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளில் முதன்முறையாகச் சீனாவுக்குச் சென்றுள்ள அவர், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புடின் ஆகியோரைச் சந்திப்பதற்காக ஒரு இராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
Bullet Proof ரயில் பயணம் ஏன்?
கிம்மின் இந்தப் பயணம் ஒரு தனிப்பட்ட, குண்டு துளைக்காத ரயிலில் நடந்துள்ளது. இது வடகொரியத் தலைவர்களின் ஒரு நீண்டகாலப் பாரம்பரியம். விமானத்தில் பயணிக்க முடியாத அளவுக்கு அந்த நாட்டின் விமான சேவை மோசமாக உள்ளது. மேலும், தனது பாதுகாப்பைக் கருதி, கிம் ரயிலில் பயணிப்பதே வழக்கம். 2023-இல் ரஷ்யாவுக்கும், 2019-இல் சீனாவுக்கும் அவர் இதே ரயிலில்தான் பயணம் செய்தார்.
சீனா, ரஷ்யாவுடன் நட்பு ஏன்?
வடகொரியாவின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதில் சீனா முக்கியப் பங்கு வகிக்கிறது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் விதித்துள்ள கடுமையான தடைகளால் வடகொரியா தவித்துவரும் நிலையில், சீனா அதற்குப் பொருளாதார ரீதியில் உறுதுணையாக இருந்து வருகிறது.
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வடகொரியா வழங்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் பயணத்தில், கிம், புடின் மற்றும் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்திப்பது, அமெரிக்காவின் தலைமையிலான உலக ஒழுங்குக்கு எதிராக இந்த மூன்று நாடுகளும் ஒன்றுசேரத் தயாராக உள்ளன என்பதைக் காட்டுகிறது.
பயணத்திற்கு முன் கிம்மின் மிரட்டல்
கிம் சீனாவுக்குப் புறப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, புதிய ஏவுகணைகள் தயாரிக்கும் தொழிற்சாலையை ஆய்வு செய்துள்ளார். மேலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கும் திட்டத்தையும் வெளியிட்டார். இந்தப் பயணம், உலக நாடுகளுக்கு வடகொரியாவின் இராணுவ பலத்தை மறைமுகமாக உணர்த்துவதாகப் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, கிம், 2019-க்குப் பிறகு ஜி ஜின்பிங்கை இப்போதுதான் நேரில் சந்திக்கிறார். கடந்த காலங்களில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கிம் பலமுறை சீனாவுக்குச் சென்று ஜி ஜின்பிங்கின் ஆதரவைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.