"எனக்கு 30 வயசுக்குள்ள இருக்கும் கன்னிப்பெண் தான் வேணும்!" - விவாகரத்தான IIT பட்டதாரியின் விபரீத கண்டிஷன்.. கிழித்து தொங்கவிடப்படும் மாப்பிள்ளை

ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்ற அவரது இந்த ஆணாதிக்க மனநிலை மேட்ச் மேக்கரை முகம் சுளிக்க வைத்துள்ளது...
marriage
marriage
Published on
Updated on
2 min read

இந்தியாவில் திருமண ஏற்பாடுகள் மற்றும் டேட்டிங் ஆலோசனைகளை வழங்கும் பிரபல மேட்ச் மேக்கர் ஓண்ட்ரிலா கபூர் அண்மையில் வெளியிட்ட ஒரு சமூக வலைதளப் பதிவு, இணையத்தில் மிகப்பெரிய விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. 37 வயதான, விவாகரத்தான ஒரு ஐஐடி (IIT) பட்டதாரி, தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று முன்வைத்த நிபந்தனைகள், இன்றைய காலத்திலும் நிலவும் ஆணாதிக்கச் சிந்தனையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றும் அந்த நபர், தனக்கு 30 வயதுக்குட்பட்ட, எவ்வித கடந்தகால உறவுகளும் இல்லாத ஒரு 'கன்னிப்பெண்' தான் வேண்டும் என்று அடம்பிடித்ததுதான் இந்த சர்ச்சைக்கு ஆரம்பப்புள்ளியாக அமைந்தது.

அந்த நபர் தனது கோரிக்கையில் மிகவும் உறுதியாக இருந்ததாக ஓண்ட்ரிலா தெரிவித்துள்ளார். "எனக்கு 30 வயதுக்கு கீழ் உள்ள பெண் வேண்டும், பிராமண சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், முக்கியமாக இதற்கு முன் யாரிடமும் பழகியிருக்கக் கூடாது" என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார். தான் ஏற்கனவே விவாகரத்தானவர் என்பதை வசதியாக மறந்துவிட்டு, தனக்கு வரும் பெண் மட்டும் எவ்வித உறவிலும் இருந்திருக்கக் கூடாது என்று அவர் எதிர்பார்ப்பது நியாயமற்றது என்று ஓண்ட்ரிலா அவரிடம் வாதிட்டுள்ளார். ஆனால், அந்த நபரோ இதற்குப் பின்னால் ஒரு "ஆராய்ச்சி" இருப்பதாகக் கூறித் தனது செயலை நியாயப்படுத்த முயன்றுள்ளார்.

அதிகப்படியான உறவுகளில் இருந்த பெண்கள் பிற்காலத்தில் துரோகம் செய்ய வாய்ப்புள்ளதாக ஏதோ ஒரு ஆராய்ச்சியில் சொல்லப்பட்டுள்ளதாக அந்த நபர் கூறியுள்ளார். இதைக் கேட்ட ஓண்ட்ரிலா, "அதே தர்க்கம் உங்களுக்கும் பொருந்துமே? நீங்கள் ஏற்கனவே திருமணமானவர், விவாகரத்தானவர்" என்று கேட்டபோது, அந்த நபர் அளித்த பதில் அதிரவைப்பதாக இருந்தது. "இல்லை, இது நியாயமான ஒப்பீடு கிடையாது, ஏனென்றால் நான் ஒரு ஆண்" என்று அவர் கூறியுள்ளார். ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்ற அவரது இந்த ஆணாதிக்க மனநிலை மேட்ச் மேக்கரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

மேலும், அந்த நபர் தனது எதிர்பார்ப்புகள் சாத்தியமானதுதான் என்றும், ஷாதி டாட் காம் (Shaadi.com) போன்ற தளங்களில் தனக்கு இது போன்ற வரன்கள் வருவதாகவும் தம்பட்டம் அடித்துள்ளார். ஆனால், அவை உண்மையானவைதானா என்பதை உறுதி செய்யவே தான் ஒரு மேட்ச் மேக்கரை நாடியதாகக் குறிப்பிட்டுள்ளார். இதைக் கேட்ட ஓண்ட்ரிலா, அந்த நபரைத் தனது வாடிக்கையாளராக ஏற்க மறுத்துவிட்டார். "ஏமாற்று வேலை உங்களை நோக்கி நடக்கவில்லை, உங்களைப் போன்ற பழமைவாத மற்றும் ஆணாதிக்க மனநிலை கொண்டவர்கள்தான் அந்தப் பெண்களை ஏமாற்றப் போகிறீர்கள்" என்று முகத்தில் அறைந்தாற்போல் கூறி அவரைத் திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்தப் பதிவு வைரலானதும், இணையவாசிகள் அந்த நபரைச் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். "இவ்வளவு திமிர் இவருக்கு எங்கிருந்து வந்தது?", "இவரது விவாகரத்திற்கு இதுதான் உண்மையான காரணமாக இருக்கும் போல", "காலாவதியான இந்த ஆளுக்குக் கன்னிப்பெண் ஒரு கேடா?" என்று பலரும் காட்டமாகப் பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம், ஒரு சிறு தரப்பினர் அந்த நபருக்குத் தனது விருப்பத்தைத் தெரிவிக்க உரிமை இருப்பதாக ஆதரித்துப் பேசி வருவது விவாதத்தை இன்னும் சூடாக்கியுள்ளது. நகர்ப்புற இந்தியாவில் நவீன மாற்றங்கள் ஏற்பட்டாலும், உயர்கல்வி கற்ற ஆண்களிடமே இன்னும் இதுபோன்ற பிற்போக்குச் சிந்தனைகள் இருப்பது இந்தச் சம்பவம் மூலம் அம்பலமாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com