தீபாவளிப் பண்டிகை என்றாலே வீட்டில் விதவிதமான உணவுகள், பிரியாணி, புலாவ், இனிப்புகள், பலகாரங்கள் என விருந்து களைகட்டும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதற்காக வழக்கத்தைவிட அதிகமான உணவுகள் தயாரிக்கப்படுவதும் உண்டு. ஆனால், பண்டிகை முடிந்த பிறகும் மீதமிருக்கும் உணவுகளை வீணாக்கக் கூடாது என்பதற்காகப் பலர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, மறுநாள் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுகின்றனர். இவ்வாறு செய்வது எப்போதும் பாதுகாப்பானதா என்ற கேள்விக்கு மருத்துவ நிபுணர்கள் முக்கியமான எச்சரிக்கையை முன்வைக்கின்றனர். தவறான முறையில் உணவைச் சேமித்து மீண்டும் சூடுபடுத்தினால் உணவு விஷமாக மாறி உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
பிரயாக் மருத்துவமனையின் நுண்ணுயிரியல் நிபுணர் டாக்டர் அல்கா கபூர் பல்வேறு முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். உணவை மீண்டும் சூடுபடுத்துவதால் அதில் இருக்கும் பல பாக்டீரியாக்கள் அழியலாம். ஆனால், சில பாக்டீரியாக்கள் ஏற்கெனவே உருவாக்கிய நச்சுப் பொருட்கள் அதிக வெப்பத்திலும் அழியாமல் இருக்கக்கூடும். எனவே, உணவை நன்றாகச் சூடுபடுத்திவிட்டோம் என்பதற்காக அது பாதுகாப்பானது என்று முடிவு செய்துவிடக் கூடாது என அவர் எச்சரிக்கிறார். சமைத்த உணவை நீண்ட நேரம் வெளியே வைத்திருப்பது பலரும் செய்யும் முக்கியமான தவறு. குறிப்பாக, பண்டிகை நாட்களில் பிரியாணி, குழம்பு, பனீர் உணவுகள் உள்ளிட்டவை பல மணி நேரம் சாப்பாட்டு மேசையிலேயே வைக்கப்படுகின்றன. விருந்தினர்கள் வந்து செல்லும் நேரத்தைப் பொறுத்து உணவு மீண்டும் மீண்டும் பரிமாறப்படுகிறது. இதனால் உணவு அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் இருக்கிறது. இத்தகைய சூழலில் பாக்டீரியாக்கள் வேகமாகப் பெருகுவதற்கான வாய்ப்பு அதிகம்.
உணவை 5 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்பநிலையில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். 5 முதல் 60 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் பல உணவு சார்ந்த பாக்டீரியாக்கள் வேகமாக வளரக்கூடும். எனவே, சமைத்த அல்லது பரிமாறிய உணவை இரண்டு மணி நேரத்திற்குள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். வெப்பமான சூழலில் வெளிப்புற வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸைத் தாண்டினால், ஒரு மணி நேரத்திற்குள் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது அவசியம். அதேபோல், அதிக அளவில் சமைக்கப்பட்ட உணவுகளை ஒரே பெரிய பாத்திரத்தில் வைத்துக் குளிர்விப்பதும் சரியான நடைமுறை அல்ல. பெரிய பாத்திரத்தில் இருக்கும் பிரியாணி அல்லது குழம்பின் நடுப்பகுதி நீண்ட நேரம் சூடாகவே இருக்கும். இதனால் பாக்டீரியாக்கள் பெருகுவதற்கான சூழல் உருவாகும். எனவே, மீதமுள்ள உணவைச் சிறிய, ஆழம் குறைந்த பாத்திரங்களில் பிரித்து வைப்பதன் மூலம் விரைவாகக் குளிர்விக்க முடியும்.
மீண்டும் சூடுபடுத்தும்போது அதிக கவனம் தேவைப்படும் உணவுகளில் சாதமும் ஒன்று. பச்சரிசியில் 'பேசில்லஸ் செரியஸ்' (Bacillus cereus) என்ற பாக்டீரியாவின் வித்துகள் இருக்கக்கூடும். சாதம் சமைக்கப்பட்ட பிறகும் இந்த வித்துகள் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது. சமைத்த சாதத்தை நீண்ட நேரம் வெளியே வைத்திருந்தால் அவை வளர்ந்து 'செருலைடு' (Cereulide) என்ற நச்சுப் பொருளை உருவாக்கலாம். இந்த நச்சு அதிக வெப்பத்திலும் எளிதில் அழியாது. இதனால் சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டாலும் வாந்தி, குமட்டல், வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சமைத்த சாதத்தை விரைவாகக் குளிர்வித்து ஒரு மணி நேரத்திற்குள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு நாளுக்குள் பயன்படுத்துவது நல்லது. மேலும், சாதத்தை ஒருமுறை மட்டுமே நன்றாகச் சூடுபடுத்திச் சாப்பிட வேண்டும். இதேபோன்ற பாக்டீரியா பாதிப்பு பாஸ்தா, உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளிலும் ஏற்படக்கூடும்.
மீதமுள்ள உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டிய பழக்கமாகும். குளிர்சாதனப் பெட்டியிலிருந்து உணவை வெளியே எடுத்து சூடுபடுத்தி, சாப்பிட்ட பிறகு மீண்டும் குளிர்வித்து வைப்பது எனத் தொடர்ந்து செய்வதால் பாக்டீரியாக்கள் வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. குறிப்பாக மைக்ரோவேவ் ஓவனில் உணவைச் சூடுபடுத்தும்போது நடுப்பகுதி குளிர்ச்சியாகவும், ஓரங்கள் அதிக வெப்பமாகவும் இருக்கலாம். எனவே, உணவை இடையிடையே நன்றாகக் கிளறி, எல்லாப் பகுதிகளும் சமமாகச் சூடாகியுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மீதமுள்ள உணவின் உட்புற வெப்பநிலை சுமார் 74 டிகிரி செல்சியஸை எட்ட வேண்டும். குழம்பு, சூப் போன்றவற்றை நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பால், கிரீம், பனீர், இறைச்சி, முட்டை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளிலும் கூடுதல் கவனம் தேவை. இவற்றில் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு ஏற்ற ஈரப்பதமும் ஊட்டச்சத்துகளும் உள்ளன. உணவு தயாரிப்பவர்களின் கைகள், பயன்படுத்தப்படும் கரண்டிகள் மற்றும் பாத்திரங்கள் மூலமாகவும் பாக்டீரியாக்கள் பரவலாம். குறிப்பாகப் பால் சார்ந்த இனிப்புகள், கஸ்டர்ட் போன்றவற்றை முறையாகக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.
மீதமுள்ள உணவுகளைச் சுத்தமான சிறிய பாத்திரங்களில் பிரித்து வைப்பதுடன், தயாரித்த தேதியையும் குறித்துவைப்பது நல்லது. முறையாகக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட பெரும்பாலான மீதமுள்ள உணவுகளை மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். உறையவைக்கப்பட்ட உணவுகளைச் சமையலறை மேசையில் வைத்துக் கரைப்பதைத் தவிர்த்து, குளிர்சாதனப் பெட்டி அல்லது மைக்ரோவேவின் குறிப்பிட்ட வசதியைப் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக, உணவு கெட்டுப்போயுள்ளதா என்பதை அதன் வாசனை, நிறம் அல்லது சுவையை மட்டும் வைத்து முடிவு செய்ய முடியாது. சில தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களும் அவை உருவாக்கும் நச்சுகளும் உணவில் எந்தவிதமான வெளிப்படையான மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் இருக்கலாம். சந்தேகத்திற்குரிய உணவைச் சுவைத்துப் பார்ப்பதும் பாதுகாப்பான வழி அல்ல.
உணவு விஷத்தன்மையால் வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப் பிடிப்பு மற்றும் நீரிழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். சிறு குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம். தொடர்ந்து வாந்தி, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, அதிக காய்ச்சல் அல்லது நீரிழப்பு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். பண்டிகைக்காகத் தயாரித்த உணவுகள் மீதமிருப்பது இயல்பானதுதான். ஆனால், அவற்றைச் சரியான முறையில் சேமித்து, தேவையான அளவு மட்டுமே மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவது அவசியம். உணவை வீணாக்காமல் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது உணவின் மூலம் உடல்நலப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதுதான்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.