“ஒரு நாள் அம்மாவை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்வேன்” - தாயின் கனவை நிறைவேற்றிய இன்ஸ்டா பிரபலம்.. வைரலாகும் ஹெலிகாப்டர் வீடியோவின் பின்னணி!

அவரது கைகளை பிடித்தபடி யோகேஷ் தைரியம் கூறி மெதுவாக ஹெலிகாப்டருக்குள் அழைத்துச் செல்கிறார்.
Uttarakhand man makes mother's dream come true with her first-ever helicopter ride
Uttarakhand man makes mother's dream come true with her first-ever helicopter rideUttarakhand man makes mother's dream come true with her first-ever helicopter ride
Published on
Updated on
2 min read

மும்பையில் வசித்து வரும் ஒரு இன்ஸ்டா பிரபலமான யோகேஷ் ராவத், சிறுவயதில் தனது தாயிடம் கொடுத்த வாக்குறுதியை பல ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றி இணையவாசிகளின் மனதை நெகிழ வைத்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட யோகேஷ், தனது தாயை வாழ்நாளில் முதல் முறையாக ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்ற மகிழ்ச்சியான தருணத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோர் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

வீடியோவின் தொடக்கத்தில் காரில் பயணித்தபடி பேசும் யோகேஷ், "நான் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் அம்மாவை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்வேன் என்று வாக்குறுதி கொடுத்தேன். இன்று அந்த கனவு நிஜமாகி இருக்கிறது" என்று உணர்ச்சியுடன் பேசியுள்ளார். பல ஆண்டுகளாக மனதில் வைத்திருந்த அந்த ஆசையை நிறைவேற்றிய தருணம் என்பதால், அவருக்கும் அவரது தாய்க்கும் அது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் என கூறியுள்ளார். ஹெலிகாப்டரை முதல் முறையாக அருகில் பார்த்த யோகேஷின் தாய், ஆரம்பத்தில் சற்று பதற்றத்துடனும் பயத்துடனும் இருந்ததாக வீடியோவில் தெரிகிறது.

ஆனால், அவரது கைகளை பிடித்தபடி யோகேஷ் தைரியம் கூறி மெதுவாக ஹெலிகாப்டருக்குள் அழைத்துச் செல்கிறார். மகனின் அன்பும் நம்பிக்கையும் தாயின் பயத்தை மெல்லமெல்ல போக்குகிறது. ஹெலிகாப்டர் வானில் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, பயமாக இருந்த முகம் பேரானந்தமாக மாறுகிறது. ஜன்னல் வழியாக விரிந்த பசுமையான காடுகள், மலைகள் மற்றும் இயற்கை எழிலை ரசித்தபடி குழந்தையைப் போல உற்சாகமாக சிரிக்கும் அவரது தாயின் முகபாவனை, அந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவரின் மனதையும் நெகிழச் செய்யும் விதமாக அமைத்திருந்தது என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில் ஆயிரக்கணக்கான இணையவாசிகள் யோகேஷின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர். "தாயின் முகத்தில் தெரிந்த அந்த மகிழ்ச்சியே இந்த வீடியோவின் மிகப்பெரிய வெற்றி", "பணத்தை விட பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றும் தருணங்கள்தான் வாழ்க்கையின் உண்மையான செல்வம்", "ஒவ்வொரு மகனும், மகளும் இதுபோன்ற ஒரு தருணத்தை பெற்றோருக்கு கொடுக்க வேண்டும்" என பலரும் உணர்ச்சிகரமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் தினமும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகும் நிலையில், தாயிடம் கொடுத்த சிறுவயது வாக்குறுதியை பல ஆண்டுகள் கழித்தும் மறக்காமல் நிறைவேற்றிய மகனின் இந்த அன்பான செயல், பலருக்கும் பெற்றோரின் ஆசைகளையும் கனவுகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தை துண்டுயுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com