மத்திய அரசை பொறுத்தவரை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்பெறும் வண்ணம் பல்வேறு சேமிப்பு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு பெரிய அளவில் நன்மைகளை தரும் பல நல்ல சேமிப்பு திட்டங்களையும் தொடர்ச்சியாக அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2023 - 2024ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சிறப்பான சேமிப்பு திட்டம் தான் மகளிர் சேமிப்பு திட்டம்.
இந்த சேமிப்பு எப்படி செயல்படுகிறது, இதில் பணத்தை சேமிப்பதால் என்ன பயன், எப்படி இணைவது, யாரெல்லாம் இணையமுடியும் என்ற பல கேள்விகளுக்கு இந்த பதிவில் விடை காணலாம்.
மேலும் படிக்க: சேமிக்கும் பணத்திற்கு வரும் வட்டி.. அதுக்கும் ஒரு வட்டி கிடைச்சா எப்படி இருக்கும்? ஒரு வழி இருக்கு!
மகளிர் சேமிப்பு திட்டம்
முன்பே கூறியதை போல, பெண்களுக்காக சிறப்பாக துவங்கப்பட்ட சேமிப்பு திட்டம் தான் இது. அஞ்சலகம் மற்றும் குறிப்பிட்ட சில வங்கிகள் மூலம் இந்த திட்டத்தில் இணைந்து பெண்கள் பலனடையலாம்.
மகளிர் சேமிப்பு திட்டம் எப்படி செயல்படுகிறது?
18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், தங்களுடைய பெயரிலேயே இந்த திட்டத்தில் இணைய முடியும். அதே போல 18 வயதிற்கு குறைவாக உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள், அவர்கள் தங்கள் பாதுகாவலர்கள் உதவியோடு இந்த திட்டத்தில் இணைய முடியும். இரண்டு ஆண்டுகளில் முதிர்ச்சி பெறும் வகையில் தான் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த திட்டத்தில் இணைய வாய்ப்பு கிடைக்கும். இந்த ஆண்டை பொறுத்தவரை வருகின்ற மார்ச் மாதம் 31ம் தேதி இந்த திட்டம் முடிவடைகிறது.
ஆகவே இந்த திட்டத்தில் சேர விரும்பும் பெண்கள், வருகின்ற மார்ச் 31ம் தேதிக்குள் அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகி இந்த திட்டத்தில் இணையலாம். அஞ்சலகம் மட்டுமல்லாமல், கனரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட சில வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களால், நேரடியாக இந்த திட்டத்தில் வங்கி மூலம் இணைய முடியும்.
மேலும் படிக்க: வங்கியின் FD திட்டம்.. அதற்கு இணையாக லாபம் தரும் ஒரு அஞ்சலக திட்டம் இருக்கு தெரியுமா?
வட்டி விகிதம்
இந்த திட்டத்தில் 1000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யமுடியும். இரண்டு ஆண்டுகளில் இந்த திட்டம் முதிர்வடையும்போது, நீங்கள் சேமித்த தொகையை 7.5 சதவிகித வட்டியுடன் திரும்ப பெறமுடியும். அதாவது நீங்கள் சேமிக்கும் 2 லட்சம் ரூபாய்க்கு, இரண்டு ஆண்டுகளின் முடிவில் வட்டியாக மட்டும் சுமார் 32,000 ரூபாய் கிடைக்கும்.
மொத்தமாகவும் அல்லது மாதந்தோறும் உங்களால் இந்த திட்டத்தில் பணத்தை சேமிக்க முடியும். கணக்கு துவங்கிய 6 மாத காலத்திற்கு பிறகு உங்களால் இந்த கணக்கை ரத்து செய்து பணத்தை பெறமுடியும். ஆனால் உங்களுக்கு அந்த முழு வட்டிவிகிதம் நிச்சயம் கிடைக்காது.
மேலும் படிக்க: ஐந்து வருட சேமிப்பு.. ரிஸ்க் இல்லாமல் அதிக லாபம் தரும் "வங்கி சேமிப்பு" திட்டம்!
மேலும் இந்த திட்டத்தில் இணைந்து ஓராண்டு காலம் முடிந்த பிறகு, உங்களால் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் தொகையில் இருந்து சுமார் 40 சதவிகிதம் வரை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆண்டுகால சேமிப்பு காலத்தில், கணக்கு வைத்திருக்கும் பெண் அல்லது அவரது பாதுகாவர் தீவிர மருத்துவ நிலைக்கு சென்றாலோ அல்லது இறந்தாலோ இந்த கணக்கை முடித்துக்கொள்ளமுடியும். அந்த தொகையும் நாமினிக்கு வழங்கப்படும்.
முன்பு கூறியதை போல 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த 2025ம் ஆண்டை பொறுத்தவரை வருகின்ற மார்ச் மாதம் 31ம் தேதியோடு இந்த திட்டம் முடிவடைவதால், பெண்கள் அனைவரும் இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்