நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பொருளாதார நிலை இருப்பதில்லை. ஆனால் மக்கள் தங்களிடம் உள்ள சிறு தொகையை கொண்டு கூட, பெரிய அளவில் சேமித்து தங்கள் பொருளாதார நிலையை உயர்த்த முடியும். அதற்கு பல நல்ல வழிகளில் இன்றைய இளைஞர்கள், பெரிய அளவில் தங்களது எதிர்காலத்திற்காக சேமிக்க துவங்கியுள்ளனர்.
மேலும் அப்படி நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு உதவும் வகையில், பல சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. அந்த வகையில், அமைப்பு சாரா தொழிலார்கள் பயன்பெறும் வண்ணம் மத்திய அரசு ஒரு சிறப்பான திட்டத்தை வகுத்துள்ளது. இதில் குறைந்தபட்சமாக மாதம் 55 ரூபாயிலிருந்து கூட மக்களால் சேமிக்க முடியும்.
என்ன திட்டம் அது? எப்படி இணைவது?
கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசால், அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனுக்காக துவங்கப்பட்ட திட்டம் தான் இது. இதன் பெயர் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் என்பதாகும். இணைய வழியில் இந்த திட்டத்தில் சேர முடியும். அதுமட்டுமல்ல, பயனாளிகள் தங்களுக்கு அருகில் உள்ள மாவட்ட தொழிலாளர் அலுவலகங்கள், எல்.ஐ.சி அலுவலகங்கள், மத்திய தொழிலாளர் அலுவலகங்கள், ஈ.பி.எஃப் மற்றும் இ.எஸ்.ஐ.சி அலுவலகங்கள் உள்ளிட்டவை மூலமும் இந்த திட்டத்தில் இணையலாம்.
திட்டத்தில் யாரெல்லாம் இணையலாம்?
18 முதல் 40வயதிற்கு உட்பட்ட நபர்கள் இந்த திட்டத்தில் இணைய முடியும். பயனாளிகளின் மாத வருமானம் 15,000 ரூபாய்க்கு மேல் இருக்க கூடாது. மேலும் இதில் இணையும் மக்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களாக இருக்க வேண்டும்.
திட்டத்தில் யாரெல்லாம் இணைய முடியாது?
வருமான வரி செலுத்துபவர்கள், ஏற்கனவே ESIC, EPF மற்றும் NPS போன்ற திட்டங்களில் உள்ளவர்கள் இதில் இணைய முடியாது.
இந்த திட்டத்தால் என்ன பயன்?
நீங்கள் உங்கள் 18 வயதில் இருந்து இந்த திட்டத்தில் இணைகிறீர்கள் என்றால், உங்களால் 60 வயது வரை பணத்தை சேமிக்க முடியும். மேலும் பிற திட்டங்களில் இல்லாத சிறப்பு அம்சமாக, மத்திய அரசும் நீங்கள் செலுத்தும் பணத்திற்கு இணையான பணத்தை உங்களுக்காக செலுத்தும். 18 வயதில் இந்த திட்டத்தில் மாதம் 55 ரூபாயை சேமிக்க துவங்கினால், 60 வயதிற்கு பிறகு மாதம் 3000 ரூபாய் பென்ஷன் தொகை கிடைக்கும்.
பயனாளியால் 40 வயது வரை இந்த திட்டத்தில் இணைய முடியும். ஆனால் அவர்களுக்கான மாத சேமிப்பு தொகை வயதுக்கு ஏற்றார் போல கூடும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களால் இந்த திட்டத்தில் இணைய முடியாது. மேலும் பயனாளி, தான் சேமிக்கும் பணத்திற்கு நாமினியை நியமிக்க முடியும்.
அரசின் பங்களிப்பு
முன்பே கூறியதை போல, இந்த திட்டத்தில் நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு இணையாக மத்திய அரசும் தனது பங்களிப்பை தருகிறது. நீங்கள் மாதம் 200 ரூபாய் சேமித்தல், உங்கள் சேமிப்பு கணக்கில் அரசும் 200 ரூபாய் பங்களிப்பை தருகிறது. நீங்கள் மாதந்தோறும் சேமிக்கும் பணத்திற்கு ஏற்றாற்போல, பென்ஷன் தொகையின் அளவும் மாறும்.
அமைப்பு தொழிலாளர்கள் என்பவர்கள், தினக்கூலியாக பணிபுரிபவர்கள், துப்புரவு தொழில் செய்பவர்கள், வீட்டு வேலை மற்றும் கட்டுமான தொழில் செய்பவர்கள் ஆவர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்