

கடந்த சில ஆண்டுகளாக, நம் நாட்டின் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் மிக முக்கியமான ஆரோக்கிய சவால், இரத்த சர்க்கரை அளவு உயருவதும், அதனால் ஏற்படும் இருதய பாதிப்புகளும் ஆகும். சர்க்கரை நோய் (நீரிழிவு) என்பது ஒரு காலத்தில் குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமே வந்தது. ஆனால், இன்று துரித உணவு பழக்கங்கள், அதிக மன அழுத்தம், மற்றும் உடல் உழைப்பு குறைவு போன்ற நவீன வாழ்க்கை முறையின் விளைவுகளால், இளவயதினரையும் இது பாதிக்கிறது.
சர்க்கரை நோய் என்பது உடலில் உள்ள கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் என்ற திரவம் போதுமான அளவு வேலை செய்யாதபோது அல்லது உற்பத்தி செய்யப்படாதபோது ஏற்படுகிறது. இந்த இன்சுலின் தான் நாம் சாப்பிடும் உணவில் இருந்து கிடைக்கும் குளுக்கோஸை (சர்க்கரையை) எடுத்து, உடலின் செல்களுக்கு ஆற்றலாக மாற்றுகிறது. இந்த செயல்பாடு தடைபடும்போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடு இல்லாமல் அதிகமாகிறது. இந்த அதிகரித்த சர்க்கரை அளவு, காலப்போக்கில் உடலின் முக்கிய குழாய்களையும் நரம்புகளையும் சேதப்படுத்துகிறது.
இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு உயர்வது, உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களை சேதப்படுத்துகிறது. குறிப்பாக, இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்கள் பாதிக்கப்படும்போதுதான் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் பல மடங்கு அதிகரிக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் வீக்கம் உண்டாகி, அது கெட்ட கொழுப்புகள் மற்றும் மற்ற கழிவுப் பொருட்களை சேர்த்து அடைப்பை உருவாக்குகிறது. இது இரத்த ஓட்டத்தை குறைத்து, இதய தசைகளுக்கு போதுமான பிராணவாயு கிடைக்காமல் செய்கிறது. இதனால் நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு, இறுதியில் மாரடைப்புக்கு வழிவகுக்கும். ஆகையால், சர்க்கரை நோயை வெறும் சர்க்கரை அளவு பிரச்சினை என்று மட்டும் நினைக்காமல், இது ஒரு பெரிய இருதய ஆபத்து காரணி என்று பார்க்க வேண்டும்.
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க உணவு முறை மாற்றம் தான் முதல் மற்றும் மிக முக்கியமான தடுப்பு நடவடிக்கை ஆகும். சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து (அரிசி, மைதா) நிறைந்த உணவுகளை குறைத்து, அவற்றிற்கு பதிலாக அதிக நார்ச்சத்துள்ள சிறுதானியங்களை (கேழ்வரகு, கம்பு, வரகு) உணவில் சேர்ப்பது இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க உதவும். சிறுதானியங்களில் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருப்பதால், இவை மெதுவாக ஆற்றலை வெளியிட்டு இரத்தத்தில் சர்க்கரை உயர்வை தடுக்கின்றன.
மேலும், சர்க்கரை கலந்த குளிர் பானங்கள், இனிப்புகள், மற்றும் துரித உணவுகளை முழுவதுமாக தவிர்ப்பது மிக மிக அவசியம். உணவு கட்டுப்பாட்டை போல, உடற்பயிற்சியும் சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தும் ஒரு மருந்தாக செயல்படுகிறது. தினமும் குறைந்தபட்சம் நாற்பது நிமிடம் வேகமான நடைப்பயிற்சி அல்லது நீச்சல் போன்ற கார்டியோ பயிற்சிகளை செய்வது, உடலில் உள்ள குளுக்கோஸை பயன்படுத்த உதவுகிறது, இதனால் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது.
சர்க்கரை நோயால் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க, இரத்த அழுத்தத்தையும் கொலஸ்ட்ரால் அளவுகளையும் சரியாக நிர்வகிப்பது அவசியம். உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு இரண்டும் இரத்தக் குழாய் சேதத்தை மேலும் தீவிரப்படுத்துகின்றன. ஆகவே, அவ்வப்போது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை பரிசோதித்து, அவற்றை மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் கால் பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
உயர் சர்க்கரை அளவு நரம்புகளையும் இரத்தக் குழாய்களையும் சேதப்படுத்துவதால், கால்களில் உணர்ச்சி குறைந்து, சிறிய காயங்கள் கூட ஆறாமல் பெரிய புண்களாக மாறலாம். கால்களை தினமும் பரிசோதிப்பது, மென்மையான காலணிகளை அணிவது போன்றவை கால்களில் புண் ஏற்படுவதை தடுக்க உதவும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.