மீன் குழம்பு என்றாலே பலருக்கும் நாவில் எச்சில் ஊறும். அதிலும் கிராமத்து ஸ்டைலில், அம்மியில் அரைத்த மசாலாவுடன், மண் சட்டியில் வைக்கும் மீன் குழம்பிற்கு ஈடு இணை உலகிலேயே கிடையாது. நகரத்தில் வசிப்பவர்களுக்கு அந்தப் பழைய காலத்து ருசி கிடைப்பதில்லை என்ற ஒரு ஏக்கம் எப்போதும் உண்டு. மீன் குழம்பை எதில் வேண்டுமானாலும் சமைக்கலாம், ஆனால் மண் சட்டியில் சமைக்கும்போது கிடைக்கும் அந்தத் தனித்துவமான மணமும், ருசியும் வேறு எதிலும் கிடைக்காது. மண் சட்டி வெப்பத்தைச் சீராக வைத்திருப்பதோடு, மீனின் சதை உடையாமல் மசாலா அனைத்தும் உள்ளே இறங்குவதற்கு வழிவகுக்கும். அடுத்த நாள் காலையில் அந்தப் பழைய மீன் குழம்பைச் சாப்பிடும்போது கிடைக்கும் சுகமே தனி. அப்படிப்பட்ட ஒரு 'பக்கா' கிராமத்து மீன் குழம்பை உங்கள் வீட்டிலேயே செய்வது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
இந்தக் குழம்பிற்குத் தேவையான மசாலாவை நாமே அரைப்பதுதான் முதல் ரகசியம். ஒரு மிக்சியில் ஒரு கைப்பிடி அளவு சின்ன வெங்காயம், ஒரு துண்டு இஞ்சி, பத்து பல் பூண்டு, இரண்டு தக்காளி மற்றும் சிறிதளவு சீரகம் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் பயன்படுத்துவதுதான் மீன் குழம்பிற்கு உண்மையான சுவையைக் கொடுக்கும். புளியைப் பொறுத்தவரை, ஒரு பெரிய எலுமிச்சை அளவு புளியை எடுத்து அரை மணி நேரம் ஊறவைத்து, திக்கான கரைசலாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கரைசலில் மூன்று ஸ்பூன் மல்லித் தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய்த் தூள், சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து நன்றாகக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது சமையலைத் தொடங்கலாம். ஒரு புதிய அல்லது பழகிய மண் சட்டியை அடுப்பில் வைத்து, தாராளமாக நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். மீன் குழம்பிற்கு நல்லெண்ணெய் தான் மிகச்சிறந்த பலனைத் தரும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்க வேண்டும். வெந்தயம் கருகிவிடாமல் பொன்னிறமாக இருக்க வேண்டும். பிறகு நீளமாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன், நாம் அரைத்து வைத்துள்ள வெங்காய-தக்காளி விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
மசாலா நன்றாக வதங்கிய பிறகு, நாம் தயாரித்து வைத்துள்ள புளிக் கரைசலைச் சட்டியில் ஊற்ற வேண்டும். குழம்பு நன்றாகக் கொதித்து பச்சை வாசனை போய், சற்று திக்காக மாறத் தொடங்கும் போது, சுத்தம் செய்து வைத்துள்ள மீன் துண்டுகளை மெதுவாக உள்ளே இறக்க வேண்டும். மீனைப் போட்ட பிறகு கரண்டி போட்டு அதிகமாகக் கிளறக் கூடாது, அப்படிச் செய்தால் மீன் உடைந்துவிடும். சட்டியைப் பிடித்து மெதுவாகக் குலுக்கி விடலாம். மூடி வைத்து ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் மிதமான தீயியில் கொதிக்க விட்டால் போதும். மீன் சீக்கிரம் வெந்துவிடும்.
கடைசியாக, குழம்பின் மேலே சிறிதளவு நல்லெண்ணெய் மற்றும் பொடியாக நறுக்கிய மல்லித்தழையைத் தூவி இறக்க வேண்டும். இப்போது மண்சட்டி மீன் குழம்பு தயார். ஆனால், ஒரு முக்கியமான விஷயம்; மண்சட்டியில் சமைத்தவுடன் குழம்பைச் சாப்பிடாமல், குறைந்தது இரண்டு மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். மண் சட்டி அந்த வெப்பத்தைத் தக்கவைத்து, மீனில் உள்ள சாறு அனைத்தும் குழம்பில் இறங்கச் செய்யும். அன்று மதியமோ அல்லது இரவுக்கோ சூடான சாதத்துடன் இந்த மீன் குழம்பைச் சேர்த்துச் சாப்பிட்டால், அதன் ருசி உங்களைச் சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்லும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.