“இன்றைய தலைமுறைக்கு தெரியாத பாரம்பரியம்!” தீபாவளி லேகியத்தின் பின்னால் இருக்கும் ரகசியம்!

தீபாவளி பலகாரம் போன்றே, தீபாவளி லேகியமும் புகழ்பெற்று விளங்குகிறது.
Diwali Lehyam
Diwali Lehyam
Published on: 
Updated on: 
2 min read

தீபாவளி பண்டிகையில், இனிப்பு மற்றும் கார வகைகளை அதிக அளவில் சாப்பிடும்போது, அது பலருக்கும் அஜீரண கோளாறை ஏற்படுத்துகிறது. இதனை சரி செய்யும் வகையில் தீபாவளி பண்டிகைக்காகவே தீபாவளி லேகியம் தயாரிக்கப்படுகிறது.

இது போன்ற பண்டிகை காலங்களில், ஒரே நேரத்தில் பல வகையான இனிப்பு மற்றும் கார வகைகளை சாப்பிடுவதால், அஜீரண கோளாறு ஏற்படுகிறது. அத்துடன் சிலருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு, வயிறு உப்பசம், திடீர் ஏப்பம் போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுவது உண்டு.

இதற்கு நிவாரணம் தரும் வகையில், தீபாவளி பலகாரம் போன்றே, தீபாவளி லேகியமும் புகழ்பெற்று விளங்குகிறது. வீட்டில் உள்ள முதியோர் மற்றும் மூத்தவர்கள் இந்த லேகியத்தை தவறாமல் செய்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொடுத்து, குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றனர்.

இன்றையத் தலைமுறையினருக்கு தீபாவளி லேகியம் என்றால் என்னவென்றே தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டில் இருக்கும் பொருட்கள் மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மூலிகைப் பொருட்களைக் கொண்டு முழுக்க முழுக்க இயற்கை முறையில் உருவாக்கப்படுகிறது இந்த தீபாவளி லேகியம்.

லேகியம் என்றதும் இன்றைய இளசுகள், ஏதோ மருந்து என்று முகத்தை சுளிப்பது வழக்கம். ஆனால் உண்மையில் லேகியம் மருந்தாகவே இருந்தாலும், அதன் சுவையும் அபாரமாக இருக்கும். இதனால் தீபாவளி பலகாரம் போன்று, இந்த தீபாவளி லேகியத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.

அப்படி என்னதான் சேர்க்கப்படுகிறது இந்த தீபாவளி லேகியத்தில்...? இதோ உங்களுக்காக தீபாவளி லேகியம் செய்முறை.

சுக்கு, மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம், சீரகம், இலவங்கப்பட்டை, கோரைக் கிழங்கு, கொத்தமல்லி விதைகள், ஓமம், அதிமதுரம், கிராம்பு, வாய்விடங்கம், சதகுப்பை ஆகிய பொருட்களை தனித்தனியாக மிதமான தீயில் வறுத்தெடுக்க வேண்டும். பின்னர் வறுத்த பொருட்களை தனித்தனியாக அரைத்து நன்கு சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் தேவையான வெல்லத்தை எடுத்து, கம்பி பாகு பதத்திற்கு காய்ச்சி, அதில் அரைத்து வைத்துள்ள பொருட்கள் ஒன்றன்பின் ஒன்றாக, சிறிது சிறிதாக சேர்த்து, கைவிடாமல் நன்கு கிளற வேண்டும். பின்னர் கடைசியாக நெய் சேர்த்து, கிளறி இறக்க வேண்டும். இந்த லேகியம் ஆறியதும், சிறிது சிறிதாக தேன் கலந்து, வேறு பாத்திரத்தில் எடுத்து வைத்தால் தீபாவளி லேகியம் தயார். இந்த லேகியத்தை, வயதிற்கு ஏற்ப 5 கிராம் முதல் 10 கிராம் வரை, காலை, மாலை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

இப்படி சாப்பிடுவதால், வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறு, வயிற்று வலி போன்றவை ஏற்படாது. இது தீபாவளி லேகியம் என்று அழைக்கப்பட்டாலும், தீபாவளிக்கு மட்டுமின்றி, விருந்து, விழாக்கள் போன்றவற்றிற்கு சென்றுவிட்டு வந்தால், இந்த லேகியத்தில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும், மருத்துவரிடம் செல்ல வேண்டாம்.

அத்துடன், இதில் சேர்த்துள்ள பொருட்களால், சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி, உடல் அசதி போன்ற பாதிப்புகளுக்கும் இந்த லேகியம் ஒரு அருமருந்தாக உள்ளது.

இந்த லேகியத்தில் சேர்க்கப்படும் அத்தனை பொருட்களும் இயற்கையான பொருட்கள் என்பதால், எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. மாறாக, உடல் உபாதைகளை குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பண்டிகை காலங்களில் பலகாரங்களையும் செய்து அசத்திய நம் முன்னோர்கள், அது ஜீரணமாக ஆரோக்கியமான லேகியத்தையும் தயார் செய்து அதனை ஈடுகட்டியுள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு பலவிதமான இனிப்பு கார வகைகளை ஒருபிடி பிடிக்கும் அனைவரும் இந்த லேகியத்தை தயாரித்து ஒரு ஸ்பூன் சாப்பிட்டு, ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.