உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக உணவுக் கட்டுப்பாடு, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி எனப் பல முயற்சிகளை மேற்கொள்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் எடை குறையாமல் இருந்தால், அதற்கான காரணம் உங்கள் தூக்கமின்மையாகவும் இருக்கலாம். உணவு மற்றும் உடற்பயிற்சிக்கு இணையாக நல்ல தூக்கமும் உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மும்பை பரேலில் உள்ள கிளெனீகிள்ஸ் மருத்துவமனையின் தூக்கக் கோளாறு நிபுணர் டாக்டர் ஹரிஷ் சாஃப்லே இதுகுறித்து விளக்கியுள்ளார். போதுமான தூக்கம் இல்லாதபோது உடல் அழுத்த நிலைக்குச் செல்கிறது. இதனால் பசி அதிகரிப்பது, உணவின் மீதான ஆசை கூடுவது, உடற்பயிற்சி செய்வதற்கான சுறுசுறுப்பு குறைவது போன்ற மாற்றங்கள் ஏற்படலாம். இதன் விளைவாக உடல் எடையைக் குறைக்கும் முயற்சி பாதிக்கப்படலாம் என அவர் கூறுகிறார்.
நமது உடலில் பசியைக் கட்டுப்படுத்தும் கிரெலின் (Ghrelin), வயிறு நிறைந்த உணர்வைத் தரும் லெப்டின் (Leptin) ஆகிய இரண்டு ஹார்மோன்கள் முக்கியமானவை. தூக்கம் குறையும்போது பசியைத் தூண்டும் கிரெலின் ஹார்மோன் அதிகரிக்கலாம். அதே நேரத்தில், வயிறு நிறைந்துவிட்டது என்ற உணர்வைத் தரும் லெப்டின் ஹார்மோன் குறையலாம். இதனால் சாப்பிட்ட பிறகும் பசி இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு, தேவைக்கு அதிகமாகச் சாப்பிடும் நிலை உருவாகலாம்.
தூக்கமின்மை கார்டிசோல் எனப்படும் மன அழுத்த ஹார்மோனின் அளவையும் அதிகரிக்கக்கூடும். இதனால் உணவின் மீதான ஆசை அதிகரிப்பதுடன், வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வதற்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இனிப்புகள், சிப்ஸ், எண்ணெயில் பொரித்த தின்பண்டங்கள் போன்ற உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் அதிகரிக்கலாம். தூக்கம் இல்லாதபோது மூளை விரைவாக ஆற்றல் தரும் உணவுகளை நாடுவதும், உணவைக் கட்டுப்படுத்தும் மன உறுதி குறைவதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
அப்படியானால் தினமும் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்? பெரும்பாலான பெரியவர்கள் இரவில் 7 முதல் 8 மணி நேரம் தரமான தூக்கத்தைப் பெற வேண்டும் என நிபுணர் பரிந்துரைக்கிறார். தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது உடல் எடை அதிகரிப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வதுடன் தொடர்புடையதாக இருக்கலாம். அதேபோல், தூங்கும் நேரத்திலும் ஒழுங்கு அவசியம். தினமும் ஒரே நேரத்தில் தூங்குவதும், ஒரே நேரத்தில் எழுவதும் உடலின் இயல்பான செயல்பாடுகளுக்கு உதவும்.
தூக்கமின்மை உடலின் வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கலாம். இதனால் ஓய்வில் இருக்கும்போது உடல் செலவிடும் கலோரிகள் குறைய வாய்ப்புள்ளது. எடை குறையும் காலத்தில் கொழுப்பைக் காட்டிலும் தசைகள் அதிகமாகக் குறையவும், இன்சுலின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக நிபுணர் தெரிவிக்கிறார். போதுமான தூக்கம் இல்லாத மறுநாளில் வளர்சிதை மாற்ற வேகம் 5 முதல் 10 சதவீதம் வரை குறையலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்தப் பாதிப்பு ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
தூக்கத்தைச் சீராக்குவதன் மூலம் உடல் எடையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு உதவி கிடைக்கலாம். இரவில் தேவையற்ற நேரத்தில் சாப்பிடுவது குறையலாம். பகலில் சுறுசுறுப்பாக இருப்பதுடன், உடற்பயிற்சியையும் சிறப்பாகச் செய்ய முடியும். உணவின் அளவைக் கட்டுப்படுத்துவதும் எளிதாகலாம். ஆனால், தூக்கம் மட்டுமே உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்துவிடாது. உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியுடன் இணைந்துதான் அது பயனளிக்கும்.
நல்ல தூக்கத்தைப் பெற சில எளிய பழக்கங்களைப் பின்பற்றலாம். தினமும் ஒரே நேரத்தில் தூங்கவும், எழவும் வேண்டும். படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே மொபைல் போன், தொலைக்காட்சி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். இரவில் அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தூங்கும் அறையை இருட்டாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருப்பது நல்லது. மாலை 4 மணிக்குப் பிறகு காபி போன்ற கஃபைன் கலந்த பானங்களைத் தவிர்ப்பதும் உதவலாம்.
தொடர்ந்து தூக்கம் வராமல் இருப்பது, காலையில் எழுந்ததும் சோர்வாக உணர்வது, அதிகமாகக் குறட்டை விடுவது அல்லது தூக்கத்தின்போது மூச்சு தடைபடுவது போன்ற பிரச்சினைகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். உடல் எடையைக் குறைக்க உணவின் அளவைக் குறைப்பதும் உடற்பயிற்சியை அதிகரிப்பதும் மட்டுமே தீர்வாகாது. உடலுக்குத் தேவையான ஓய்வையும் வழங்க வேண்டும். சீரான உணவு, முறையான உடற்பயிற்சி, தினமும் 7 முதல் 8 மணி நேரத் தரமான தூக்கம் ஆகியவற்றைப் பின்பற்றுவது ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க உதவும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.