"வாகன ஓட்டிகளுக்கு மீண்டும் ஷாக் நியூஸ்!" - பெட்ரோல், டீசல் விலை உயர்வு! ஒரே வாரத்தில் 2வது அதிர்ச்சி அறிவிப்பு?

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 82 பைசா உயர்ந்து
petrol price hike
Published on
Updated on
1 min read

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இன்று (மே 19) முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விலை உயர்வின் படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 86 பைசாவும், டீசல் விலை 83 பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள் இது இரண்டாவது முறையாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, குறிப்பாக ஈரான் பகுதியில் நீடித்து வரும் மோதல்கள் மற்றும் உலகளாவிய எண்ணெய் விநியோக பாதிப்புகள் ஆகியவை இந்த விலை உயர்விற்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றன. இதன் தாக்கமாக எண்ணெய் இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ளதால், இந்திய எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCs) மீண்டும் விலையை திருத்தியுள்ளன.

முன்னதாக கடந்த வாரம் லிட்டருக்கு ரூ.3 வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டிருந்தன. ஆனால் அந்த உயர்வு கூட நிறுவனங்களின் இழப்புகளை முழுமையாக சமநிலைப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. கடந்த சுமார் 10 வாரங்களாக பழைய விலையிலேயே எரிபொருளை விற்பனை செய்து வந்ததால், எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இன்று மீண்டும் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.97.77-இல் இருந்து ரூ.98.64 ஆக உயர்ந்துள்ளது. டீசல் விலை ரூ.90.67-இல் இருந்து ரூ.91.58 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் பெட்ரோல் விலை 91 பைசா உயர்ந்து ரூ.107.59 ஆகவும், டீசல் விலை 94 பைசா உயர்ந்து ரூ.94.08 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ.104.70 ஆகவும், டீசல் விலை ரூ.96.07 ஆகவும் உயர்ந்துள்ளது.

தமிழக தலைநகர் சென்னையிலும் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 82 பைசா உயர்ந்து ரூ.104.49 ஆகவும், டீசல் விலை 86 பைசா உயர்ந்து ரூ.96.11 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக எரிபொருள் விலை உயர்வதால், போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பொதுப் பயன்பாட்டு பொருட்களின் விலைகளும் அடுத்த சில நாட்களில் உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஆட்டோ, டாக்சி மற்றும் லாரி போக்குவரத்து கட்டணங்களும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு இந்த புதிய எரிபொருள் விலை உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com