"பொருளாதார நெருக்கடியில் இந்தியா?" அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்! 'சாமானிய மக்களின் நிலை என்னவாகப் போகிறது?'

விரைவில் போர் முடிவடைந்து ஹோர்மோஸ் நீர்சந்தி எந்த தடையும் இன்றி திறக்கப்பட்டால் மட்டுமே இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா மட்டுமின்றி பிறநாடுகளும் வெளிவரும்.
India economic crisis
India economic crisisIndia economic crisis
Published on
Updated on
2 min read

மேற்கு ஆசிய மோதல் தொடர்வதால், இந்தியாவில் பொருளாதார நெருக்கடி உருவாகிவருவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர். கடந்த சில நாட்களாக அரசாங்கமும் நாட்டின் நிதித்துறையும் விடுத்த எச்சரிக்கைகள் கவனத்தை ஈர்த்துள்ளன. உயர்ந்த கச்சா எண்ணெய் விலை, எரிபொருள் விலை உயர்வுக்கான சாத்தியம், அதிகரித்து வரும் குடும்பச் செலவுகள் குறித்த கவலைகள் ஆகியவை இந்த கவலையை அதிகரித்துள்ளது.

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, அரசு ஊழியர்களை வாரம் 2 முறை வீட்டில் இருந்து பணி செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் மற்ற தனியார் நிறுவனங்களும் இதை பின்பற்ற அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாடு மக்களிடையே மிகுந்த கவலையை உருவாக்கியுள்ளது. மேலும், CNG விலையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பிரதமர் மோடி, மக்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் Work From Home முறையை கடைபிடிக்க கேட்டுக்கொண்டது. தங்கத்தில் சிறிது காலம் முதலீடு செய்யாமல் இருப்பது மற்றும் தங்கத்திளை வாங்காமல் இருப்பது போன்றவற்றை கடைபிடிக்கும்படி கேட்டுக்கொண்டார். தற்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தற்போது இந்த போர் தொடரும் பட்சத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற Intraday வர்த்தகத்தில், ரூபாய் முதன்முறையாக ஒரு டாலருக்கு 96 என்ற முக்கிய உளவியல் எல்லையைத் தாண்டி வீழ்ச்சி கண்டது. இறுதியில், இந்திய ரூபாய் 21 பைசா சரிந்து, அமெரிக்க டாலருக்கு எதிராக 95.97 என்ற மதிப்பில் முடிவடைந்துள்ளது. அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் தினமும் கிட்டத்தட்ட ரூ.1,000 கோடி இழந்து வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். அவரது கூற்றுப்படி, கடந்த காலாண்டில் இந்த நிறுவனங்கள் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி நஷ்டத்தைச் சந்தித்துவந்துள்ளன. "எண்ணெய் நிறுவனங்கள் இந்த அழுத்தத்தை இன்னும் எவ்வளவு காலம் தாங்கிக்கொள்ள முடியும் என்பது எனக்குக் கவலையளிக்கிறது," என்று அவர் கூறினார்.

இது போன்ற செயல்முறைகளால், வரும் மாதங்களில் எரிபொருள் விலை, பணவீக்கம் மற்றும் உர விநியோகம் ஆகிய மூன்று துறைகள் குடும்பங்களை நேரடியாக சென்று பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது உழைக்கும் மக்களை வெகுவாக பாதிக்கும் அபாயம் உள்ளது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். போர் சூழல் தொடங்கியதிலிருந்து கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. பிப்ரவரி 27 அன்று, ஒரு பேரல் சுமார் 67 டாலராக வர்த்தகமானது. தற்போது அது ஒரு பேரலுக்கு கிட்டத்தட்ட 107 டாலராக உயர்ந்துள்ளது, இது சுமார் 60% அதிகரிப்பாகும். உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை காரணமாக, கடந்த இரண்டு மாதங்களில் 120-க்கும் மேற்பட்ட நாடுகள் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன. பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 44%, அமெரிக்காவில் 42% மற்றும் சீனாவில் 31% அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் போர் முடிவடைந்து ஹோர்மோஸ் நீர்சந்தி எந்த தடையும் இன்றி திறக்கப்பட்டால் மட்டுமே இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா மட்டுமின்றி பிறநாடுகளும் வெளிவரும். மேலும், சாமானிய மக்களும், தங்களது இயல்பு வாழ்கை முறைக்கு திரும்ப முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், கார் வாங்குவது அல்லது வெளிநாட்டுப் பயணம் திட்டமிடுவது போன்ற பெரிய செலவுகளைக் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காவது ஒத்திவைக்குமாறும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com