பெயர்கள் ஒன்றுதான், குற்றங்கள் பல! நீட் தேர்வு மோசடியில் கைதான 3 'மணிஷா'க்கள் பின்னணி என்ன?

நீட் (NEET-UG) தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த பல முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
NEET-UG scam
NEET-UG scamNEET-UG scam
Published on
Updated on
2 min read

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நீட் (NEET-UG) தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த பல முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடியில் ஒரு விசித்திரமான ஒற்றுமை என்னவென்றால், கைதானவர்களில் மூன்று பெண்களின் பெயர் 'மணிஷா' என்பதுதான். இவர்கள் மூவரும் இந்த வினாத்தாள் கசிவுச் சம்பவத்தில் வெவ்வேறு நிலைகளில் முக்கியப் பங்கு வகித்ததாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) குற்றம் சாட்டியுள்ளது. மாணவர்களுக்கு வினாத்தாள்களைக் கொண்டு சேர்ப்பதில் தொடங்கி, அதைத் தயார் செய்வது வரை இவர்கள் வலை விரித்திருப்பதாகத் தெரிகிறது.

முதலில் கைது செய்யப்பட்ட மணிஷா வாக்மரே, புனேயில் அழகுக்கலை நிபுணராக (Beautician) பணியாற்றி வருகிறார். மே 14 அன்று கைது செய்யப்பட்ட இவர், வினாத்தாள் கசிவில் ஒரு முக்கியமான இணைப்பாக செயல்பட்டுள்ளார். இவருக்கும், மற்றொரு கைதியான மணிஷா மந்தாரேவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், இருவரும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்ததாகவும் சிபிஐ கூறியுள்ளது. இவர் தான் வினாத்தாள்களை மற்றொரு குற்றவாளியான தனஞ்சய் லோகண்டேவிடம் சப்ளை செய்ததாகக் கூறப்படுகிறது.

அடுத்ததாக, மணிஷா மந்தாரே என்பவர் புனேவில் உள்ள பிரபலமான கல்லூரியில் உயிரியல் ஆசிரியையாகப் பணிபுரிந்தவர். தேசிய தேர்வு முகமை (NTA) இவரை ஒரு நிபுணராகவும் நியமித்திருந்தது. மே 16 அன்று கைது செய்யப்பட்ட இவர், தனது வீட்டில் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளார். இந்த வகுப்புகளின் போது, நீட் தேர்வுக்காகத் தயார் செய்யப்பட்ட உயிரியல் (Botany மற்றும் Zoology) பாடங்களின் வினாக்களை கசியவிட்டுள்ளதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் சுமார் 2002-லிருந்து ஆசிரியராகப் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது மணிஷாவான மணிஷா ஹவள்தார், புனேயில் உள்ள ஒரு பள்ளியின் முதல்வர் ஆவார். இயற்பியல் ஆசிரியரான இவர், இன்னும் இரண்டு மாதங்களில் ஓய்வு பெறவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரும் என்.டி.ஏ அமைப்பால் ஒரு நிபுணராக நியமிக்கப்பட்டிருந்ததால், இயற்பியல் வினாத்தாள்களை அணுகும் அதிகாரம் இவருக்கு இருந்திருக்கிறது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர் இயற்பியல் வினாக்களைக் கசியவிட்டுள்ளார். இவர் மே 22 அன்று கைது செய்யப்பட்டார்.

கடந்த மே 3 அன்று 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை அடுத்து, மே 12 அன்று அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. வினாத்தாள் கசிவு குறித்த புகார்கள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டு, தற்போது வரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் பலரும் கல்வித்துறையுடன் தொடர்புடையவர்கள். நாசிக்கைச் சேர்ந்த சுபம் கைர்னார், வினாத்தாள்களை 10 லட்ச ரூபாய்க்கு வாங்கி, 15 லட்சத்திற்கு விற்றுள்ளார். இவர் ஒரு மருத்துவக் கல்வி ஆலோசகர் போலச் செயல்பட்டுள்ளார். அதேபோல், ஓய்வு பெற்ற வேதியியல் ஆசிரியர் பிரகலாத் விட்டல் குல்கர்னி, தனது வீட்டில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் மூலம் கசிந்த வினாக்களை மாணவர்களுக்குப் போதித்துள்ளார். இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சிவராஜ் மோட்டேகான்கர் என்பவரது பயிற்சி மையத்தில், நீட் தேர்வில் வந்த அதே வேதியியல் வினாக்கள் அடங்கிய புத்தகம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவருடைய மகனும் தேர்வெழுதிய நிலையில், சிபிஐ இவர்களையும் விசாரித்து வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com