கோடைகால மின் தேவை 'கிடுகிடு' உயர்வு! "தட்டுப்பாடு வராம இருக்க அரசு போட்ட மாஸ்டர் பிளான்"

மின் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் முடிவாக, அனைத்து அனல் மின் நிலையங்களும் முழுத் திறனில் இயங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
India power demand 2026
India power demand 2026India power demand 2026
Published on
Updated on
1 min read

இந்தியாவில் வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ள நிலையில், மின்சாரத் தேவை புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி 256 ஜிகாவாட் ஆக இருந்த மின் தேவை, மே 20-ஆம் தேதி 265 ஜிகாவாட் ஆக அதிகரித்துள்ளது. வெயில் இன்னும் தீவிரமடையும் என்பதால், ஜூன் மாதத்தில் இது 271 ஜிகாவாட் ஆகவும், ஜூலை மாதத்தில் 283 ஜிகாவாட் ஆகவும் உயரும் என்று மத்திய மின்சார அமைச்சகம் எரிசக்தி நிலைக்குழுவிடம் தெரிவித்துள்ளது. இந்த உச்சக்கட்ட கோடைகால மாதங்களில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்கவும், தட்டுப்பாடு இல்லாமல் மின்சாரம் வழங்கவும் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மின் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் முக்கிய முடிவாக, கோடைகாலம் முழுவதும் அனைத்து அனல் மின் நிலையங்களும் முழுத் திறனில் இயங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கோடை காலத்தின் முக்கியமான இந்த நாட்களில் எந்தவொரு பராமரிப்புப் பணிகளுக்காகவும் மின் உற்பத்தி நிலையங்களை நிறுத்த அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் கூடுதலாக 15,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு, அதிகரிக்கும் மின் தேவையைச் சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மின் உற்பத்திக்கான நிலக்கரி கையிருப்பு குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது. தற்போது 18 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. வழக்கமாக 30 நாட்கள் கையிருப்பு இருக்க வேண்டும் என்ற நிலையில், இது சற்று குறைவாக இருந்தாலும், நிலக்கரி விநியோகம் சீராக உள்ளதால் பெரிய சிக்கல் இருக்காது என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எரிவாயு விநியோகத்தைப் பொறுத்தவரை, ஈரான் விவகாரம் காரணமாக சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது எரிவாயு விலையையும் விநியோகத்தையும் பாதித்துள்ள நிலையில், நைஜீரியாவிலிருந்து மாற்றாக எரிவாயு இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களைச் சரியாகப் பயன்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. பகல் நேரங்களில் சூரிய சக்தி மின்சாரம் அதிக அளவில் கிடைப்பதால், அந்த நேரத்தில் நீர்மின் நிலையங்களைச் சேமித்து வைத்து, மாலை அல்லது தேவைப்படும் நேரங்களில் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஜூன் மாதத்திலிருந்து காற்றாலை மின் உற்பத்தியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மின் கட்டமைப்பில் அழுத்தம் குறையும். இதற்கிடையில், கூடுதல் மின் பகிர்வு உதவி கேட்டுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு, தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. ஒட்டுமொத்தத்தில், கோடையின் உச்சக்கட்ட மின் தேவையைச் சமாளிக்க நாடு முழுமையாகத் தயாராக இருப்பதாக மின்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com