

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னையை சேர்ந்த ஜெயின் தம்பதியினர் 121 கிலோ தங்க நகைகளை காணிக்கையாக வழங்கியுள்ளனர். ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் இந்தக் காணிக்கை வழங்கப்பட்டுள்ளது. ரூ.206 கோடி மதிபுள்ள, வைரங்கள் பதிக்கப்பட்ட 46 வகையான தங்க நகைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
சென்னையைச் சேர்ந்த வர்தமான் மற்றும் ராதிகா ஜெயின் தம்பதியினர், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் முன்னிலையில் இன்று ஆபரணங்களை முறைப்படி ஒப்படைத்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.206 கோடி என்றும், மொத்த எடை 121 கிலோ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலுக்கு அண்மைக் காலங்களில் வழங்கப்பட்ட மிகப்பெரிய நன்கொடைகளில் ஒன்றாக சென்னை தம்பதியின் இந்த நன்கொடை பார்க்கப்படுகிறது. அதில் கிரீடம், பாதம், இடுப்பு பட்டை, தோள்பட்டை, சங்கு, சக்கரம் உள்ளிட்ட தலை முதல் உள்ளங்கால் வரை ஏழுமலையானை அலங்கரிக்கக் கூடிய விலையுயர்ந்த நகைகள் இடம் பெற்றுள்ளன.
ஆபரணங்கள் குறித்த விவரங்கள்:
- வைரங்களின் மொத்த எடை – 238.2 காரட்
- விலைமதிப்பற்ற கற்கள் – 2,247.7 காரட்
- நீல நிற சபையர் கற்கள் – 91.6 காரட்
- மஞ்சள் நிற சபையர் கற்கள் – 84.2 காரட்
- மாணிக்கம் மற்றும் மரகதக் கற்கள் – 2,916.5 கிராம்
- சாளக்கிராமக் கற்கள்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தங்க நகைகளைக் காணிக்கையாக வழங்கிய தம்பதியினருக்கு நன்றி தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், ஏழுமலையான் மீதான ஆழ்ந்த பக்தி மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடாக இந்தக் காணிக்கை அமைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தெய்வீக உந்துதலின் காரணமாகவே இந்தக் காணிக்கையை வழங்கியதாக ஜெயின் தம்பதியினர் தன்னிடம் தெரிவித்ததாகவும் சந்திரபாபு நாயுடு கூறினார். திருமலை என்பது நம்பிக்கை, பக்தி மற்றும் ஆன்மீக நிறைவின் அடையாளமாக விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், பல நூற்றாண்டுகளாக மன்னர்கள் முதல் சாதாரண பக்தர்கள் வரை ஏராளமானோர் ஏழுமலையானுக்கு மதிப்புமிக்க காணிக்கைகளை வழங்கி வருவதாக தெரிவித்தார்.
குறிப்பாக, பல்லவர்கள், சோழர்கள், சேரர்கள், பாண்டியர்கள், மைசூர் மன்னர்கள் மற்றும் மராத்திய ஆட்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு மன்னர் வம்சத்தினர் திருப்பதி கோயிலுக்கு தங்கங்கள் மற்றும் நன்கொடை பொருட்களை காணிக்கையாக வழங்கியதை அவர் நினைவுகூர்ந்தார். அந்தப் பாரம்பரியம் இன்றும் பக்தர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, தனது வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு முக்கியமான சம்பவத்தையும் சந்திரபாபு நாயுடு நினைவுகூர்ந்தார். கடந்த காலத்தில் அலிபிரியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இருந்து தான் உயிர் தப்பியதைக் குறிப்பிட்ட அவர், "வெங்கடேஸ்வரப் பெருமான் எனக்கு மறுவாழ்வு அளித்தார். அவருடைய ஆசீர்வாதங்கள்தான் என்னைக் காப்பாற்றின" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் வசதி படைத்தவர்கள் ஜெயின் தம்பதியினரைப் போல தங்களது செல்வத்தின் ஒரு பகுதியைச் சமூக நலன், ஆன்மீகம் மற்றும் ஏழை எளிய மக்களின் நலனுக்காக பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்தார்.
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்க நகைகள் காணிக்கையாக வழங்கப்பட்டிருப்பதும், தற்போது கவனம் பெற்றுள்ளது.
யார் இந்த வர்தமான்
சென்னையை சேர்ந்த வர்தமான் ஹெல்த்கேர் தொழில்நுட்ப நிறுவனமான 'Access Healthcare'-ன் இணை நிறுவனராகத் தொழில் துறையில் பங்காற்றி வருகிறார். சென்னை காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலராகவும் பல சமூக நலப் பணிகளைச் செய்து வருகிறார்.
இவ்வாறு அவர் பல்வேறு நற்பணிகளை செய்து வந்த நிலையில் தற்போது 121 கிலோ நகைகளை திருப்பதி கோவிலுக்கு காணிக்கையாக கொடுத்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.