சிக்கித் தவித்த இந்தியா.. கைகொடுக்கும் அமெரிக்கா! 'கிரிட்டிகல் மினரல்ஸ்' ஒப்பந்தத்தின் பின்னணி என்ன?

இந்தியாவை இணைத்த சில மாதங்களிலேயே, இந்த புதிய 'கிரிட்டிகல் மினரல்ஸ்' கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
India-US rare earth deal
India-US rare earth dealIndia-US rare earth deal
Published on
Updated on
2 min read

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து, மிக முக்கியமான கனிம வளங்கள் மற்றும் அரிதான கனிமங்களின் (Rare earth elements) விநியோகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு புதிய ஒப்பந்தத்தில் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டுள்ளன. சீனா, செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத் துறைகளில் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருவதை முறியடிக்க, அமெரிக்கா ஏற்கனவே 'பாக்ஸ் சிலிகா' (Pax Silica) என்ற திட்டத்தை ஆரம்பித்திருந்தது. அந்தத் திட்டத்தில் இந்தியாவை இணைத்த சில மாதங்களிலேயே, இந்த புதிய 'கிரிட்டிகல் மினரல்ஸ்' கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது எதிர்காலத் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தேவையான கனிமங்களைச் சீனாவிடமிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தைக் குறைக்க உதவும்.

வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், குவாட் (Quad) நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு இது குறித்துப் பேசுகையில், இரு நாடுகளும் இந்த கனிமங்களின் சுரங்கம், சுத்திகரிப்பு, மறுசுழற்சி மற்றும் இதற்கான முதலீடுகள் ஆகியவற்றில் இணைந்து செயல்படப் போவதாகத் தெரிவித்தார். உலக அளவில் கனிமங்களைச் சுத்திகரிக்கும் பணியில் 90 சதவீதம் சீனாவே கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்தியா தனது தேவைக்கான பல முக்கிய கனிமங்களை முழுமையாக வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. எனவே, இத்தகைய ஒப்பந்தங்கள் இந்தியத் தொழில்துறைக்கு மிகவும் அவசியமானதாக மாறியிருக்கிறது.

கடந்த ஆண்டு இறுதியில், சீனா கனிமப் பொருட்களின் ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தபோது, இந்தியா போன்ற நாடுகளின் தொழில் நிறுவனங்கள் பெரும் தட்டுப்பாட்டைச் சந்தித்தன. கோபால்ட், லித்தியம், நிக்கல் மற்றும் சிலிகான் போன்ற முக்கியமான கனிமங்கள் இல்லாமல் நவீனத் தொழில்நுட்பப் பொருட்களைத் தயாரிக்க முடியாது. இதை உணர்ந்தே, இந்தியா இத்தகைய கூட்டு முயற்சிகளில் இறங்கியுள்ளது. இது வெறும் இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் மட்டுமல்ல, வாஷிங்டனில் தொடங்கப்பட்ட 'ஃபோர்ஜ்' (FORGE) போன்ற பல திட்டங்களின் தொடர்ச்சியாகும்.

முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக, அண்டை நாடுகளிலிருந்து (Land Bordering Countries) வரும் முதலீடுகளுக்கு மத்திய அரசு சில புதிய விதிமுறைகளைச் சில மாதங்களுக்கு முன் தளர்த்தியிருந்தது. எலக்ட்ரானிக் பாகங்கள், பாலிசிலிகான் மற்றும் அரிதான காந்தங்கள் போன்ற குறிப்பிட்ட துறைகளில் முதலீட்டு விண்ணப்பங்களுக்கு 60 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது போன்ற முயற்சிகள் மூலமாக இந்தியாவிற்குப் பெரிய அளவில் முதலீடுகளைக் கொண்டு வர அரசு முயன்று வருகிறது. கடந்த நிதியாண்டில் இந்தியாவின் நேரடி அந்நிய முதலீடு (FDI) நல்ல வளர்ச்சியைக் கண்டிருந்தாலும், உலக அளவில் போர்ச் சூழல்கள் மற்றும் பணவீக்கம் காரணமாக அந்நிய முதலீட்டாளர்கள் அடிக்கடி வெளியேறுவது ஒரு சவாலாகவே இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி 2025-ல் அமெரிக்கா சென்றிருந்தபோது, இந்தியா-அமெரிக்கா இடையே 'ட்ரஸ்ட்' (TRUST) என்ற தொழில்நுட்ப உறவு மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாகவே இந்தச் செயல்பாடுகள் தொடர்ந்து வருகின்றன. செமிகண்டக்டர், மேம்பட்ட பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்ற துறைகளில் பாதுகாப்பான விநியோகச் சங்கிலியை உருவாக்க இரு நாடுகளும் உறுதியளித்துள்ளன. ஆராய்ச்சிகள், கனிமங்களைச் சுத்திகரித்தல் மற்றும் மறுசுழற்சி செய்வது என அனைத்து மட்டங்களிலும் இரு நாடுகளும் கைகோர்த்துச் செயல்பட முடிவெடுத்துள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் இன்னொரு முக்கியமான அம்சம் 'ஸ்ட்ரேட்டஜிக் மினரல் ரெக்கவரி' (Strategic Mineral Recovery) என்ற புதிய திட்டமாகும். இதன் மூலம் அலுமினியம், நிலக்கரிச் சுரங்கம் மற்றும் கச்சா எண்ணெய் போன்ற கனரகத் தொழில்களில் இருந்து வெளியேறும் கழிவுகளில் இருந்தே லித்தியம், கோபால்ட் மற்றும் அரிதான கனிமங்களைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து செயல்படுத்தப் போகின்றன. இதன் மூலம் கனிமங்களுக்காக ஒரு நாட்டையோ அல்லது ஒரு நிறுவனத்தையோ சார்ந்து இருக்கும் நிலை மாறி, இந்தியாவே இத்துறை சார்ந்த உலகத் தொழில்நுட்ப மையமாக உருவாக வழி பிறக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com