“இந்திய இளைஞர்கள், விவசாயிகள் தவிப்பு.. மோடி சாக்லேட் சாப்பிடுவதில் பிஸி?” – ‘துரோகி’ என ராகுல் காந்தி கடும் தாக்குதல்!

“நம் தலைக்கு மேல் ஒரு பொருளாதாரப் புயல் பொங்கி எழுகிறது. ஆனால் நமது பிரதமர் இத்தாலியில் மிட்டாய்களை
modi with meloni
Published on
Updated on
2 min read

ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியையும், அவர்  தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வெளியிட்டுள்ள தொடர் கருத்துகள், மத்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடி முதல் அரசியலமைப்பு பாதுகாப்பு வரை பல்வேறு விவகாரங்களை முன்வைத்து ராகுல் காந்தி பாஜக அரசை நேரடியாக தாக்கியுள்ளார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வரும் சூழலில், பிரதமர் மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் தனது X தள பதிவில், “நம் தலைக்கு மேல் ஒரு பொருளாதாரப் புயல் பொங்கி எழுகிறது. ஆனால் நமது பிரதமர் இத்தாலியில் மிட்டாய்களை விநியோகிப்பதில் மும்முரமாக இருக்கிறார். விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் என அனைவரும் கண்ணீர் விடுகின்றனர். பிரதமர் சிரித்துக்கொண்டே காணொளிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்; பாஜகவினர் கைதட்டி கொண்டிருக்கிறார்கள். இது தலைமைத்துவம் அல்ல, இது ஒரு கேலிக்கூத்து,” என கடுமையாக விமரிசித்து பதிவிட்டிருந்தார். இந்திய பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில் இத்தாலி பிரதமர் மெலோனிக்கு மெலோடி சாக்லேட் கொடுத்து நட்பை பரிமாறிய வீடியோ விரலை ஆனதையடுத்து, அதை குறிப்பிட்டு விமர்சித்திருந்தார் ராகுல்காந்தி.  

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலான நிலையில், வேலைவாய்ப்பு பிரச்சினை, விலைவாசி உயர்வு, பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட விவகாரங்களை மையமாகக் கொண்டு ராகுல் காந்தி தாக்குதல் நடத்தியிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதற்கிடையில், தனது மக்களவைத் தொகுதியான ரேபரேலியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் RSS அமைப்பையும் கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர்,நீங்கள் வீட்டிற்கு செல்லும்போது, ​​இந்த RSS தொண்டர்கள் உங்களிடம் வந்து, ​​அவர்கள் நரேந்திர மோடியைப் பற்றியும், அமித் ஷாவைப் பற்றியும் பேசுவார்கள். நீங்கள் அவர்களை நோக்கி “உங்கள் பிரதமர் ஒரு துரோகி, உங்கள் உள்துறை அமைச்சர் ஒரு துரோகி, உங்கள் அமைப்பு ஒரு துரோகி. நீங்கள் இந்தியாவை விற்று விட்டார்கள். எங்கள் அரசியலமைப்பையும், டாக்டர் அம்பேத்கரையும், மகாத்மா காந்தியையும் தாக்கியுள்ளீர்கள்,” என்று கூறுங்கள் என்றார். இந்த கருத்து அரசியல் சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தினார்.

அமேதியில் நடைபெற்ற “பகுஜன் ஸ்வபிமான் சம்மேளன்” நிகழ்ச்சியிலும் உரையாற்றிய ராகுல் காந்தி, அரசியலமைப்பின் பிரதியை கையில் ஏந்தியபடி, இந்திய அரசியலமைப்பு என்பது சமூக நீதிக்கான பல தலைமுறைகளின் போராட்டத்தின் அடையாளம் என குறிப்பிட்டார். மேலும், “நரேந்திர மோடி இந்தியாவின் செல்வத்தை மக்களிடமிருந்து பறித்து அதானி மற்றும் அம்பானி போன்ற சில தொழிலதிபர்களிடம் ஒப்படைத்து விட்டார்” என்றும் குற்றம்சாட்டினார்.

நாட்டில் விரைவில் “பொருளாதாரப் புயல்” உருவாகும் என்றும், ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பதற்றம் காரணமாக எரிபொருள் விலை, பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்."தேர்தலுக்கு முன் பெட்ரோல் விலை உயராது என சொன்னார்கள். பெட்ரோல் தட்டுப்பாடு நிலவும் நிலையில், அம்பானி பெட்ரோலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். ஏற்றுமதி செய்த பணத்தை பாஜகவுக்கு நிதியாக அளிக்கிறார். வரப்போகும் பொருளாதார புயலில் இருந்து நாட்டு மக்களை பிரதமர் மோடியால் காப்பாற்ற முடியாது” என்றும் குற்றம்சாட்டினார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்துகளுக்கு பாஜக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. தேசிய தலைவர்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக, காங்கிரஸ் கட்சி அரசியல் லாபத்திற்காக பொய்யான பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது என பதிலடி கொடுத்து வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com