
நெஸ்லே.. உங்களுக்கு இந்த நிறுவனத்தை பற்றி சொல்லவே தேவையில்லை. நம்ம வீடுகளில் நிச்சயம் இதோட ஐட்டம் ஏதாவது ஒண்ணாவது நிச்சயம் இருக்கும். இப்போ, அமெரிக்காவில் தயாரிக்கப்படுற தன்னோட எல்லா உணவு மற்றும் பான பொருட்களில் இருந்து செயற்கை வண்ணங்களை (Artificial Colours) 2026-க்குள் முழுமையாக நீக்கப் போவதாக இந்நிறுவனம் அறிவிச்சிருக்கு.
நெஸ்லே, அமெரிக்காவில் விற்கப்படுற தன்னோட உணவு மற்றும் பான பொருட்களில் இருந்து FD&C (Food, Drug, and Cosmetic) வண்ணங்களை முழுமையாக நீக்கப் போவதாக அறிவிச்சிருக்கு. இந்த FD&C வண்ணங்கள், செயற்கையாக உருவாக்கப்படுற வண்ணங்கள், எடுத்துக்காட்டா Red 3, Blue No.1, Yellow 5 மாதிரியானவை. இவை மிட்டாய்கள், செரியல்ஸ், பானங்கள் மாதிரியான பொருட்களுக்கு கலர்ஃபுல் தோற்றத்தை கொடுக்க பயன்படுத்தப்படுது. நெஸ்லே, இந்த செயற்கை வண்ணங்களை இயற்கையான மாற்று வண்ணங்களால் (Natural Alternatives) மாற்றப் போகுது.
எந்தெந்த பொருட்கள்?
நெஸ்குயிக் பானனா ஸ்ட்ராபெரி மில்க், டிகியோர்னோ பீட்ஸா, ஹாட் பாக்கெட்ஸ் மாதிரியான பொருட்களில் இன்னும் செயற்கை வண்ணங்கள் இருக்கு. இவை எல்லாம் இயற்கை வண்ணங்களுக்கு மாற்றப்படும். நெஸ்லே-யோட அமெரிக்க பொருட்களில் 90% ஏற்கனவே செயற்கை வண்ணங்கள் இல்லாம இருக்கு. மீதி 10% பொருட்களும் 2026-க்குள் மாற்றப்படும்.
நெஸ்லே, செயற்கை வண்ணங்களுக்கு பதிலா இயற்கையான மூலங்களில் இருந்து எடுக்கப்படுற வண்ணங்களை பயன்படுத்தப் போகுது. இவை பழங்கள், காய்கறிகள், தாவரங்களில் இருந்து பெறப்படுது. எடுத்துக்காட்டா:
சிவப்பு, நீலம், ஊதா: பீட்ரூட், ராஸ்பெர்ரி, சிவப்பு கோஸ் (Red Cabbage) ஆகியவற்றில் இருந்து வர்ற ஆந்தோசயனின்கள் (Anthocyanins).
பச்சை: குளோரோஃபில் (Chlorophyll) மூலமா.
மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு: ஆப்ரிகாட், கேரட், தக்காளி ஆகியவற்றில் இருந்து வர்ற கரோட்டினாய்டுகள் (Carotenoids).
இந்த இயற்கை வண்ணங்கள், உடலுக்கு பாதுகாப்பானவை, மேலும் நுகர்வோர் விரும்புற “கிளீன் லேபிள்” (Clean Label) உணவுகளுக்கு ஏற்றவை. இவை உணவின் தோற்றத்தை கலர்ஃபுல் ஆக்குறதோட, ஆரோக்கியத்தையும் மேம்படுத்துது.
நெஸ்லே இந்த முடிவை எடுக்கறதுக்கு பின்னால் பல காரணங்கள் இருக்கு:
அமெரிக்காவில் மக்கள் இயற்கையான, ஆரோக்கியமான உணவுகளை விரும்புறாங்க. செயற்கை வண்ணங்கள் ADHD, ஒபிசிட்டி, சர்க்கரை நோய் மாதிரியான பிரச்சனைகளை உண்டாக்கலாம்னு சில ஆய்வுகள் சொல்லுது. இதனால, “கிளீன் லேபிள்” உணவுகளுக்கு தேவை அதிகரிச்சிருக்கு.
மேலும், 2025 ஏப்ரலில், அமெரிக்காவின் சுகாதாரத் துறை செயலர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் மற்றும் FDA ஆணையர் மார்ட்டி மாகரி, 2026-க்குள் செயற்கை வண்ணங்களை நீக்க வேண்டும்னு உணவு நிறுவனங்களை வலியுறுத்தினாங்க. இது தன்னார்வ அடிப்படையில் நடந்தாலும், மெதுவா முன்னேற்றம் இருந்தா FDA கடுமையான நடவடிக்கைகள் எடுக்கலாம்னு எச்சரிச்சிருக்கு.
அதுமட்டுமின்றி, க்ராஃப்ட் ஹெய்ன்ஸ், ஜெனரல் மில்ஸ், கானாக்ரா பிராண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் 2027-க்குள் செயற்கை வண்ணங்களை நீக்குவதாக அறிவிச்சிருக்கு. இதனால, நெஸ்லே முன்னோடியாக இருக்க இந்த முடிவை எடுத்திருக்கு. ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய யூனியன், யு.கே. மாதிரியான நாடுகளில் செயற்கை வண்ணங்கள் பல பொருட்களில் தடை செய்யப்பட்டிருக்கு. அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலம் 2027-ல இருந்து செயற்கை வண்ணங்கள் உள்ள உணவுகளுக்கு “மனிதர்கள் உண்ண பரிந்துரைக்கப்படாதவை”னு லேபிள் கட்டாயமாக்கியிருக்கு.
இந்தியாவில் நெஸ்லே விற்கும் பொருட்களிலும் இதுபோன்று மாறுதல் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.