

கேரளாவின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்கப் போவது யார் என்கிற போட்டியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் மிக முன்னிலையில் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்சியின் மேலிடப் பார்வையாளர்களான அஜய் மேக்கன் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் தங்களின் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் இன்று சமர்ப்பித்துள்ளனர். புதிய எம்.எல்.ஏ-க்கள், கூட்டணிக் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகு, கட்சியின் மேலிடம் இறுதி முடிவை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பதவிக்கான பட்டியலில் கே.சி. வேணுகோபால் தவிர, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி. சதீசன் மற்றும் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன. 63 வயதான வேணுகோபால் தற்போது காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும், ஆலப்புழா தொகுதி எம்.பி-யாகவும் உள்ளார். ஒருவேளை அவர் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டால், தனது எம்.பி பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) பெற்ற மிகப்பெரிய வெற்றிக்கு வேணுகோபால் தான் முக்கிய காரணம் என்று தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கேரள முதலமைச்சரின் பதவியேற்பு விழா வரும் திங்கட்கிழமை நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்த விழாவில் ராகுல் காந்தி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழகத் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது ஆட்சியமைக்கப் போராடி வரும் நடிகர் விஜய்யும் இந்த விழாவில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணியிலிருந்து விலகி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், விஜய்யின் தவெக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 112 இடங்களே உள்ளன. இதனால் அங்கு இழுபறி நீடித்து வரும் வேளையில், கேரளாவில் காங்கிரஸுக்கு அத்தகைய நெருக்கடி ஏதும் இல்லை. 140 இடங்களைக் கொண்ட கேரள சட்டசபையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 102 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய முதலமைச்சர் பினராயி விஜயனின் இடதுசாரி முன்னணி வெறும் 35 இடங்களை மட்டுமே பிடித்து ஆட்சியை இழந்துள்ளது. இந்த விழாவிற்கு பினராயி விஜயனுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.