ஆளுநர் தனது பொறுப்பறிந்து செயல்பட வேண்டும்-அன்பழகன்!

சூதாட்டம் நடைபெறுவது புதுச்சேரியில் கலாச்சார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளதாக  அன்பழகன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஆளுநர் தனது பொறுப்பறிந்து செயல்பட வேண்டும்-அன்பழகன்!
Published on
Updated on
1 min read

உயர் பொறுப்புகளில் இருக்கும் சபாநாயகர் மற்றும் ஆளுநர் தங்களின் பொறுப்புகளையும், அதிகாரங்களையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கீடா?

இது தொடர்பாக புதுச்சேரி அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்பழகன், புதுச்சேரிக்கு 1400 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார், இது குறித்து மத்திய பட்ஜெட்டில் தான் அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் இன்னும் இது சம்மந்தமாக நாடாளுமன்றம் கூட்டப்படவில்லை.

இது தொடர்பாக பட்ஜெட்டில் எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு ஒதுக்கப்படும் என அதிகார பூர்வமாக மத்திய அரசு அறிவிக்கும். ஆனால் இது தொடர்பான கோப்புகள் குறித்து சபாநாயகர் தெரிந்து கொண்டு புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என சபாநாயகர் அறிவிப்பது ஏற்புடையதல்ல. நிதி அமைச்சர் போல சபாநாயகர் கருத்து கூறுவதால் முதலமைச்சர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் உள்ளார். 

ஆளுநர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்

இதே போல துணை நிலை ஆளுநரை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சிப்பதும் அவருக்கு ஆளுநர் பதில் அளிப்பதும் அரசுக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக உள்ளது. உயர் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களின் பொறுப்புகளையும், அதிகாரங்களையும் பொறுத்து செயல்படவேண்டும். உயர் பொறுப்பில் உள்ளவர்கள் பல்வேறு கருத்துகளை கூறுவதால் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்ப்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது. எனவே  இதை அதிமுகவின் கருத்தாக பொறுப்பில் இருப்பவர்கள் எடுத்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். 

ஏனாமில் சீர்கேடு

புதுச்சேரி ஆட்சிப்பகுதியான ஏனாமில் அரசு அனுமதியோடு மூன்று சூதாட்ட கிளப்புகள் நடைபெறுவதாகவும், பல்வேறு மாநிலங்களில் உள்ள கோடீஸ்வரர்கள், மாபியா கும்பல்கள் ஏனாமில் தங்கி சூதாட்டம் விளையாடி ஏனாமை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இந்த மூன்று கிளப்புகளை தொடர்ந்து மேலும் 22 கிளப்புகள் அரசு அனுமதியின்றி புதிதாக தொடங்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் பயத்துடன் வாழும் சூழல் ஏற்ப்படுள்ளது. ஒரு நாளைக்கு 5 கோடி அளவில் சூதாட்டம் நடைபெறுகிறது இதனை அரசு உன்னிப்பாக கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஏனாமில் நடைபெரும் 25 சூதாட்ட கிளப்புகள் குறித்து ஆளுநர், முதலமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிந்தும் இந்த சூதாட்டம் நடைபெறுவது புதுச்சேரியில் கலாச்சார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளதாக  அன்பழகன் குற்றம்சாட்டி உள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com