"ஒரே நாடு ஒரே கணவரா"? ஆப்ரேஷன் 'சிந்தூர்' பற்றி சர்ச்சை கருத்து - சிக்கலில் பஞ்சாப் முதல்வர்!

இந்திய ராணுவத்தையும், பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மனைவிகளையும் (வீர் நாரிகள்) அவமதித்ததாகவும்...
punjab Cm bhagwant man
punjab Cm bhagwant man
Published on
Updated on
2 min read

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து, பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறார்.

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன?

ஆபரேஷன் சிந்தூர், இந்திய ராணுவத்தால் 2025 மே 6-7 அன்று நடத்தப்பட்ட ஒரு முக்கியமான ராணுவ நடவடிக்கை. ஏப்ரல் 22, 2025 அன்று, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல், பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படும் பயங்கரவாத அமைப்புகளால் நடத்தப்பட்டது என்று இந்திய அரசு கூறியது. இதற்கு பதிலடியாக, இந்திய விமானப்படை, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இந்த ஆபரேஷனுக்கு “சிந்தூர்” என்று பெயர் வைத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியப் பெண்களின் திருமண அடையாளமான குங்குமத்தை மையமாக வைத்து, இந்தத் தாக்குதலில் உயிரிழந்த பெண்களின் கணவர்களுக்கு நீதி வழங்குவதற்காக இந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த ஆபரேஷன், இந்தியாவின் பயங்கரவாதத்திற்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை உலகுக்கு காட்டியது. மே 12, 2025 அன்று உரையாற்றிய பிரதமர் மோடி, "பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடுகளையும், பயங்கரவாதிகளையும் ஒரே மாதிரி பார்ப்போம். இந்தியாவின் பெண்களின் சிந்தூரை அழிக்க முயற்சிப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்,” என்று கூறினார்

பகவந்த் மானின் சர்ச்சை கருத்து

இந்நிலையில், நேற்று (ஜூன் 3) 2025 அன்று, பஞ்சாபின் லூதியானா மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யும் போது, பகவந்த் மான் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசினார். அப்போது, பாஜகவின் “வீடு வீடாக சிந்தூர்” (Ghar Ghar Sindoor) பிரச்சாரத்தை கிண்டலாக விமர்சித்தார். “இது என்ன ஒரே நாடு, ஒரே கணவர் திட்டமா? மோடியின் பெயரில் சிந்தூர் வைப்பீங்களா?” என்று அவர் விமர்சனம் செய்தார். இந்தக் கருத்து, ஆபரேஷன் சிந்தூரை நகைச்சுவையாக பேசியதாகவும், இந்திய ராணுவத்தையும், பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மனைவிகளையும் (வீர் நாரிகள்) அவமதித்ததாகவும் பாஜக குற்றம்சாட்டியது.

பாஜகவின் பஞ்சாப் செய்தித்தொடர்பாளர் பிரித்பால் சிங் பாலியாவால், மானின் இந்தக் கருத்தை ஒரு வீடியோவாக X-ல் பகிர்ந்து, “பகவந்த் மான் எல்லை மீறிவிட்டார். இந்திய ராணுவத்தை கேலி செய்யும், வீர் நாரிகளை அவமதிக்கும் இவருக்கு உணர்வு இல்லை. சிந்தூரின் மதிப்பு, அதில் உள்ள தியாகம், அன்பு, பக்தி இவருக்கு புரியாது,” என்று கடுமையாக விமர்சித்தார். பாஜகவின் தேசிய செய்தித்தொடர்பாளர் பிரதீப் பந்தாரி, “இந்தக் கருத்து இந்தியாவுக்கு எதிரானது,” என்று கூறி, மான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரினார்.

ஆபரேஷன் சிந்தூரின் பின்னணி

ஆபரேஷன் சிந்தூர், இந்தியாவின் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு முக்கியமான பதிலடி. மே 7, 2025 அதிகாலை 1:05 முதல் 1:30 மணி வரை, இந்திய விமானப்படை, பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-மொகமது, லஷ்கர்-இ-தொய்பா, மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை தாக்கியது. பாகிஸ்தானின் பஹவல்பூர், முரிட்கே, மற்றும் PoK-யில் உள்ள கோட்லி, முசாபராபாத் போன்ற இடங்களில் உள்ள 9 முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த ஆபரேஷனை, இந்தியாவின் முப்படைகளும், உளவுத்துறையும், BSF-உம் இணைந்து நடத்தினர். உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பிரதமர் மோடியின் உறுதியான அரசியல் முடிவு, உளவுத்துறையின் துல்லியமான தகவல், மற்றும் ராணுவத்தின் தாக்குதல் திறன் இந்த வெற்றிக்கு காரணம்,” என்று பாராட்டினார்.

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், இந்த ஆபரேஷனை உணர்ச்சிகரமாக வரவேற்றனர். புனேவைச் சேர்ந்த சந்தோஷ் ஜகதலேயின் மனைவி பிரகதி, “ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரை கேட்டபோது கண்ணீர் வந்தது. இது எங்கள் தியாகத்திற்கு நீதி வழங்கியது,” என்று கூறினார்.

பகவந்த் மானின் கருத்து, பாஜகவினரிடையே மட்டுமல்ல, சமூக ஊடகங்களிலும் பெரும் எதிர்ப்பை உருவாக்கியது. பலர், இந்தக் கருத்து இந்திய ராணுவத்தின் தியாகத்தையும், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் உணர்வுகளையும் அவமதிப்பதாக கருதினர். ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் (AAP) செய்தித்தொடர்பாளர் நீல் கார்க், “சிந்தூரை ஒரு பெண்ணுக்கு அளிக்கும் உரிமை அவரது கணவருக்கு மட்டுமே உள்ளது, எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை,” என்று மானுக்கு ஆதரவாக பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com