"தாமாக விரும்பி பாலியல் தொழில் செய்வது சட்டவிரோதமானது அல்ல!" காவல்துறை அவர்களை துன்புறுத்த முடியாது - உச்சநீதி மன்ற 'தீர்ப்பு' சொல்லியது என்ன?

விபச்சார விடுதிகளை நடத்துவது சட்டவிரோதமானதாக இருந்தாலும், அங்கு சோதனைகள் நடத்தும் போது விருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை கைது செய்வதோ அல்லது துன்புறுத்துவதோ சட்டத்திற்கு புறம்பானது.
Supreme Court judgment
Supreme Court judgmentSupreme Court judgment
Published on
Updated on
1 min read

தாமாக முன்வந்து பாலியல் தொழிலில் ஈடுபடும் வயது வந்த நபர்களை காவல்துறை துன்புறுத்தவோ, காவலில் எடுக்கவோ கூடாது என்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. ஒழுக்கமற்ற போக்குவரத்துத் தடுப்புச் சட்டம் (ITPA) தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாலியல் தொழில் தானாகவே சட்டவிரோதமான செயலாக கருதப்பட முடியாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் வயது வந்தவர்களை "மீட்க" வேண்டிய அவசியமே இல்லை எனக் குறிப்பிட்டது. விபச்சார விடுதிகளை நடத்துவது சட்டவிரோதமானதாக இருந்தாலும், அங்கு சோதனைகள் நடத்தும் போது விருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை கைது செய்வதோ அல்லது துன்புறுத்துவதோ சட்டத்திற்கு புறம்பானது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

பாலியல் தொழிலாளர்களின் மறுவாழ்வு தொடர்பாகவும் உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்துக்களை பதிவு செய்துள்ளது. எந்தவொரு வயது வந்த பாலியல் தொழிலாளியும் தனது விருப்பத்திற்கு எதிராக மறுவாழ்வு மையங்களில் சேர்க்கப்படக் கூடாது என்றும், மறுவாழ்வு நடவடிக்கைகள் முழுமையாக அவர்களின் சம்மதத்தின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"மறுவாழ்விற்கான அரசியலமைப்பு உரிமை, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளையும் வாய்ப்புகளையும் வழங்க அரசை கட்டாயப்படுத்துகிறது. ஆனால், அவர்களின் விருப்பத்திற்கு எதிராக மறுவாழ்வு திட்டங்களை திணிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை" என்று நீதிபதிகள் கூறியுள்ளது குறிப்பிடப்பதக்கது. வணிக ரீதியான பாலியல் சுரண்டலுக்காக கடத்தப்படும் நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தபோது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை வெறும் "மீட்கப்பட வேண்டியவர்கள்" என பார்க்க முடியாது என்றும், அவர்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ITPA சட்டத்தின் பிரிவு 17 கீழ் தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளையும் நீதிமன்றம் விமர்சித்தது. மேலும், "கடத்தப்பட்டவர்கள், கட்டாயப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தாமாக விரும்பி பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் என வேறுபாடின்றி அனைவரையும் ஒரே விதமாக நடத்துவது சரியான அணுகுமுறை அல்ல" எனக் கூறியுள்ளது. பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள், ஒப்புதல் மற்றும் தன்னாட்சி ஆகியவற்றை முன்னிறுத்தும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, வயது வந்த பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் மறுவாழ்வு தொடர்பான முடிவுகள் அவர்களது சம்மதத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவாக வலியுறுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு, பாலியல் தொழிலாளர்களின் மனித உரிமைகள் மற்றும் தனிநபர் சுதந்திரம் குறித்த விவாதங்களில் முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com