விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் குளக்கரை தெருவை சேர்ந்தவர் வடிவேலு. இவருடைய மனைவி பவானி. இந்த தம்பதியின் 2-வது மகள் ஹேமாவதி (7). இந்த சிறுமி 11ம் தேதி இரவு பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் 12ம் தேதி அதிகாலையில் எழுந்து பார்த்தபோது திடீரென மாயமாகியுள்ளார். காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை குழந்தை கண்டுபிடிக்கப்படவில்லை.
கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் ஆகியும் குழந்தை கிடைக்காத நிலையில், ஆளும் அரசினை விமர்சித்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போய் இன்றோடு 11 நாட்கள் ஆகியும், அச்சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் இந்த அரசு திணறிக்கொண்டு இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
குழந்தையைக் கண்டுபிடிக்காத அரசையும் - காவல்துறையையும் கண்டித்து தி.மு.கழகம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தரணிவேந்தன் தலைமையில் செஞ்சி ஆலம்பூண்டியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இராணிப்பேட்டையில் கூட இதே போல ஒரு குழந்தை காணாமல் போய் சுமார் ஒரு மாதம் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை என்ற நிலையில் தான் தமிழ்நாடு இருக்கிறது. முதலமைச்சர் தன் Reels மோகத்தைத் தள்ளி வைத்துவிட்டு, பிள்ளையை தொலைத்துத் தவிக்கும் அந்தக்குடும்பத்தின் வலியை உணர்ந்து, காணாமல் போன குழந்தையை உடனே கண்டறிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று காட்டமாக தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார் எதிர்க்கட்சி தலைவர்.
தற்போது வரை குழந்தையை கண்டுபிடிக்க காவல்துறை சார்பில் பல்வேறு கட்ட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் 10 நாட்களுக்கு மேலாகியும் 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கில் எந்த துப்பும் கிடைக்காத நிலையில், வேறு வழியில்லாமல் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்களும் வெளியாகியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.