
பாஜக எப்படியாவது திமுக -வை வீழ்த்தி தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என கடுமையாக போராடி வருகிறது. அதன் முதல்படிதான் அதிமுக -உடனான கூட்டணி. அதிமுக -உடன் கூட்டணி அமைத்த நாளிலிருந்தே பஞ்சாயத்துதான். தற்போதுதான் இரு கட்சிகளும் ஏதோ ஒரு சுமூகமான மனநிலைக்கு வந்துள்ளது. இந்த சூழலில்தான் அதிமுக -வில் உள்கட்சி பூசலும் எழுந்துள்ளது. திமுக -விலும் கூட்டணி கட்சிகளின் சலசலப்பு பூதாகரமாக மாறி உள்ளது.
இந்த அமளிகளுக்கெல்லாம் இடையில் விஜய் -ன் அரசியல் பிரவேசம் அனைவருக்கும் திகிலூட்டும் ஒன்றாக அமைந்துள்ளது. விஜய் -ன் கடும் திமுக எதிர்ப்பு அனைத்து பிரதான கட்சிகளுக்கும் ஆபத்துதான். இதுவரை தேர்தலை சந்திக்காத ஒரு புதிய கட்சி 20% வாக்குகளை பெற வாய்ப்புண்டு என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த விஜய் Factor -அனைத்து பிரதான கட்சிகளுக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
இந்த சூழலில்தான் வருமானத்தை மறைத்ததாக கூறி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தும்படி, தாமதமாக வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, நடிகரும் தவெக தலைவருமான விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது.
வருமானத்தை மறைத்ததற்கான ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022 ம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், விஜய் தாக்கல் செய்திருந்த வழக்கு, நீதிபதி சி.சரவணன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அபராதம் விதித்து 2019 ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் காலதாமதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டுமென தெரிவித்தார்.
வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வருமான வரிச்சட்டப்படி தவெக தலைவர் விஜய்-க்கு அபராதம் விதித்து சரிதான் என தெரிவித்தார்.
இதையடுத்து, இதேபோன்ற ஒரு வழக்கில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகலை தாக்கல் செய்ய விஜய் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.