முடிவுக்கு வருகிறதா அதிமுக உட்கட்சி மோதல்? குறையும் சி.வி சண்முகம் மவுசு! ஈபிஎஸ்- யை சந்தித்த முக்கிய நிர்வாகிகள்?

சி.வி சண்முகம் தரப்பு 10 எம்எல்ஏ -க்கள் ஆதரவு தர உள்ளதாக தெரிகிறது
EPS vs SP velumnai
Published on
Updated on
2 min read

இன்று எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் அதிமுக தலைமை எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்திக்க வந்தது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பிற்கு ஆதரவு அளித்து வந்த 4 MLA-கள் இன்று ஈபிஎஸ் சந்திக்க வந்துள்ளனர். நத்தம் விசுவநாதன், திருத்தணி கோ. அரி, அருண்மொழித்தேவன் மற்றும் ரவி ஆகியோர் ஈபிஎஸ் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர். அதனையடுத்து பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி சண்முகம் தரப்பு 10 எம்எல்ஏ -க்கள் ஆதரவு தர உள்ளதாக தெரிகிறது.

நேற்று 4 அதிமுக MLA -க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து, உடனடியாக விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்தனர். பதவியேற்று 20 நாட்களில் மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா மற்றும் அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கிசுப்பையா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில்  இணைந்தது அதிமுகவில் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து அந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது. இதனால் அதிமுக MLA -கள் எண்ணிக்கை குறைந்தது.

தற்போது நடக்கும் எடப்பாடி பழனிச்சாமி உடனான எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் ஆதரவாளர்கள் பேச்சு வார்த்தைகள் மூலம் ஈபிஎஸ் ஆதரவு  MLA -கள் பலம் 32 ஆக உயர வாய்ப்புள்ளது. அதிமுக ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக சிவி சண்முகம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என 2 அணிகளாக பிரிந்தது. தவெக அரசின் மீதான சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவி சண்முகம் தரப்பு விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது. இதன் காரணமாக 144 என்ற பெரும்பான்மையுடன் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்தது. ஆனால் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது சி.வி சண்முகம் தரப்பிற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. இது அந்த தரப்பிற்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. தவெகவிற்கு முன்னதாக ஆதரவு அளித்த இடதுசாரி கட்சிகள் அதிமுகவிற்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க கூடாது என்ற நிபந்தனையுடன் ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் அதிமுக கட்சியின் முக்கிய பெறுப்புக்களில் இருந்து எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இந்த முடிவு அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமியின் முடிவாக இருந்தது. தற்போது நடக்கும் இந்த பேச்சுவார்த்தை மீண்டும் கட்சியில் இணையும் ஒரு அறிகுறியாக தெரிகிறது. கட்சியில் ஏற்படும் அடுத்தடுத்த ராஜினாமா மற்றும் கட்சி தாவல்கள் அதிமுகவை முற்றிலும் அதிருப்தியில் ஆழ்த்துவதன் காரணமாகவே இந்த சந்திப்பு இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com