

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகவும் அவர்களுடன் சேர்ந்து செயல்பட்டதாகவும் கூறி கடந்த மாதம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டிருந்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் "புரட்சி தலைவரின் காலத்திலும் சரி புரட்சி தலைவி அம்மாவின் காலத்திலும் சரி இயக்கத்திற்காக அயராது உழைத்தவன் நான், அம்மாவின் மறைவிற்கு பிறகு எனக்கு இரண்டு முறை வாய்ப்புகள் கிடைத்திருந்தது இந்த இயக்கம் உடைந்து விடக்கூடாது என்பதற்காகவும் இயக்கத்திற்கு எந்த தடையும் வந்துவிடக்கூடாது எனவும் நான் எனது வாய்ப்புகளை விட்டுக் கொடுத்துவிட்டேன்.
நான் திராவிட முன்னேற்ற கழகத்திற்காக செயல்படுகிறேன் என சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து, தேசத்திற்காக போராடி உயிர் தியாகம் செய்தவருக்கு மரியாதை செலுத்தியதற்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து என்னை நீக்கி எடப்பாடி எனக்கு பரிசு கொடுத்திருக்கிறார். 53 ஆண்டுகள் கழகத்திற்காக பணியாற்றிய நான் இந்த அறிவிப்பால் மனம் வருந்துகிறேன், கண்ணீர் சிந்துகிறேன், இரவு முழுவதும் நான் தூங்கவில்லை” என வருத்தம் தெரிவித்திருந்தார்.
அதிமுகவுடன் தவெக கூட்டணி வைக்கப் போகிறது என்ற தகவல்கள் பரவி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி தனது பிரச்சாரத்தின் போது “கொடியை பறக்கவிட்டு பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க” என தெரிவித்தது கூட்டணியை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுகவின் சில முன்னாள் அமைச்சர்கள் விஜய்யை தொடர்ந்து விமர்சித்து வந்தனர். எனவே அதிமுக தவெகவுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.
தற்போது அதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக செங்கோட்டையன் விஜய்யுடன் கூட்டணி வைத்தால் நிச்சயம் எடப்பாடி பழனிச்சாமி தவெகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என அரசியல் வட்டாரங்களில் தெரிவித்துள்ளனர். இது குறித்து தற்போது வரை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படாமல் உள்ளது. இருப்பினும் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைவது விஜய்க்கு பெரிய பலமாக இருக்கும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.