தேர்தலுக்கு பின்.. “முதல் முறையாக பெரம்பூருக்கு வருகை தந்த முதல்வர் விஜய்” - பூ தூவி வரவேற்ற மக்கள்!

தனது சொந்த தொகுதியான பெரம்பூரில் புதிய எம்.எல்.ஏ. அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார்
Chief Minister vijay visits Perambur
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு முதலமைச்சரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான விஜய், தனது சொந்த தொகுதியான பெரம்பூரில் புதிய எம்.எல்.ஏ. அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, பெரம்பூரில் அவர் மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ தொகுதி நிகழ்வாக இது அமைந்தது. புதிய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தையும் முதல்வர் விஜய் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இந்த மையத்தின் மூலம் வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சமூகச் சான்று உள்ளிட்ட பல்வேறு அரசுச் சேவைகளை ஒரே இடத்தில் எளிதாகப் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அலுவலக திறப்பு விழாவைத் தொடர்ந்து, வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த கொள்கைத் தலைவர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் விஜய், பின்னர் அலுவலகத்தின் பல்வேறு வசதிகளை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து, தனது எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து, அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து, பெரம்பூர் தொகுதி மக்களிடம் இருந்து மனுக்களை முதல்வர் விஜய் நேரில் பெற்றுக் கொண்டார். பொதுமக்கள் அளித்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு பல்வேறு அரசு சான்றிதழ்களையும் நேரடியாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், முதல்வர் விஜய்க்கு மலர்கொத்து வழங்கி வரவேற்றார். அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற விஜய், அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு தொகுதியை மட்டும் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிலையில், பெரம்பூர் தொகுதியைத் தேர்வு செய்து, திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு, பெரம்பூர் தொகுதியில் நடைபெறும் முதல் முக்கிய அதிகாரப்பூர்வ நிகழ்வாக இந்த அலுவலக திறப்பு விழா அமைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாலை 4 மணியளவில் வியாசர்பாடி மெட்ரோ ரயில் நிலையத்தில் போக்குவரத்துக் கழகத்தால் அமைக்கப்பட்டுள்ள மின்சார வாகன சார்ஜிங் நிலையத்தை முதல்வர் விஜய் பார்வையிட உள்ளார். அதன் பின்னர், எம்.கே.பி. நகரில் உள்ள நியாயவிலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டு, 50 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்குவதுடன், அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பெரம்பூர் தொகுதி மக்களுக்கு அரசு சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், புதிய எம்.எல்.ஏ. அலுவலகமும் இ-சேவை மையமும் முக்கிய பங்காற்றும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com