தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 9-ம் தேதி திங்கட்கிழமை அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் தொடர்ந்து கிடைக்கும் விடுமுறையைப் பயன்படுத்தி பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.
இதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகக் கூட்டரங்கில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆயுத பூஜை விடுமுறையின்போது பொதுமக்கள் தெரிவித்த நிறை, குறைகளைக் கேட்டறிந்து, இந்த முறை அவற்றைச் சரிசெய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5 முதல் 7-ம் தேதி வரை சென்னையில் இருந்து மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நவம்பர் 5 (வியாழக்கிழமை): வழக்கமான பேருந்துகள் 2,191; சிறப்புப் பேருந்துகள் 2,316.
நவம்பர் 6 (வெள்ளிக்கிழமை): வழக்கமான பேருந்துகள் 2,191; சிறப்புப் பேருந்துகள் 2,632.
நவம்பர் 7 (சனிக்கிழமை): வழக்கமான பேருந்துகள் 2,191; சிறப்புப் பேருந்துகள் 2,479.
சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, இந்த மூன்று நாட்களிலும் மொத்தம் 26,139 பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளின் வசதிக்காகத் திருவான்மியூர், ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், சிறுசேரி, அடையாறு உள்ளிட்ட 16 இடங்களில் இருந்து பேருந்துகளில் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் கிளாம்பாக்கம் அருகே மறைமலைநகரில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அங்கிருந்து திருவண்ணாமலை, சிதம்பரம், கடலூர், பண்ருட்டி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, தீபாவளி காலத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். ஆம்னி பேருந்துகள் சங்கத்தினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாகவும், அதிக கட்டணம் வசூலித்த புகாரின் அடிப்படையில் இதுவரை 10 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து மக்கள் சிரமமின்றிப் பயணம் செய்யும் வகையில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்