

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. நேற்று மறைமலைநகர் நகராட்சி மைதானத்தில் ஆயுத பூஜை தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வோருக்காக தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கும் இடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் ஆய்வு செய்தார். பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்க்கு மாற்றப்ப்பட்டு 2023ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பண்டிகை காலங்களில் மாதவரம், கோயம்பேடு, கிளம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வரும் 19ம் தேதி ஆயுதபூஜை தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக கிளாம்பாக்கம் காலநிலை பூங்கா, மறைமலைநகரில் ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி 6 ஏக்கர் பரப்பளவில் உள்ள நகராட்சி மைதானத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனைத்து வகை பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.
இந்த மைதானத்தை நேற்று மாலை போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் ஆய்வு செய்தார். இங்கு பயணியருக்கு அடிப்படை வசதிகள், இணைப்பு பேருந்துகள், நடத்துனர், ஓட்டுநர் ஓய்வு அறைகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்தபோது செய்தியாளர் ஒருவர் ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறைக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்து குறித்து பேசினார். ஆயுத பூஜை தொடர் விடுமுறை முன்னிட்டு மொத்தம் 14,963 சிறப்பு பேருந்துகள் 4 நாட்களுக்கு இயக்கப்படவுள்ளது.
கும்பகோணம்,தஞ்சாவூர், நாகப்பட்டினம் பகுதிகளுக்கு மறைமலைநகரில் இருந்து 382 சிறப்பு பேருந்து இயக்கப்படுவதாகவும், கிளாம்பாக்கதில் இருந்து மறைமலைநகர் வரை 45 இலவச மாநகர பேருந்துகள் சுழற்சி முறையில் இயக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சோதனை முறையில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு பேருந்து நிலையம்: கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) வழியாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாதவரம் பேருந்து நிலையம்: ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மறைமலை நகர் (தற்காலிக பேருந்து நிலையம்): கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலையத்திற்குச் செல்ல, கிளாம்பாக்கத்திலிருந்து இலவச மாநகரப் பேருந்து ஷட்டில் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
15ம் தேதி முதல் நான்கு நாட்கள் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டார். இந்த ஆய்வின் போது போக்குவரத்து துறை செயலாளர் நிர்மல் ராஜ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்