

விராலிமலையில் தீபாவளிக்கு ஒரு வீட்டுக்கு 2,000 ரூபாய் மதிப்புள்ள இனிப்பு, டம்ளர் போன்ற பொருட்களை விநியோகிக்க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கியுள்ளதாகவும், 90 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தவறாமல் கொடுத்து வருவதாகவும் முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் தவெக அரசு குறித்தும் விராலிமலை இடைத்தேர்தல் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார் ரகுபதி. செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, நவம்பர் 2ஆம் தேதி CM சார் “Bro விஜய்” புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்திருந்தார். புதுக்கோட்டை மக்களுக்கு புதிய திட்டங்கள் அறிவிப்பார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் ஜோசியர் இடம் சரியில்லை என்று சொன்னதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிகழ்ச்சி நடந்தது. எந்த திட்டங்களையும் அறிவிக்காமல் முதல்வர் வாய் பேசாமல் அமைதியாக இருக்கும் நிகழ்ச்சியாக மட்டுமே அந்த நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் வந்த நாளன்று புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி மகளிர் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற இருந்தது, முதல்வர் வரும்போது நண்பா நண்பீஸ் சென்று அவரை பார்க்க வேண்டும் என்பதற்காக செமஸ்டர் தேர்வை ஒத்திவைத்துவிட்டார்கள். ஆனால் அதே தேதியில் புதுக்கோட்டையில் உள்ள மன்னர் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. ஒரு கல்லூரியில் தேர்வு நடைபெறுகிறது, முதல்வரை பார்க்க வேண்டும் என்பதற்காக கல்லூரியில் தேர்வு ஒத்திவைக்கப்படுவதா? என்றும் கேள்வி எழுப்பினார். பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு அங்கும் ஏமாற்றம். வழியில் 10 கோடி ரூபாய்க்கு 45 கிலோமீட்டருக்கு பேரிகேட் போடப்பட்டு, நடக்காத நிகழ்ச்சிக்கு பிரம்மாண்டமாக பந்தல் அமைத்தது தானே தவிர வேறொன்றும் நடைபெறவில்லை.
முதல்வரின் புதுக்கோட்டை விசிட் என்பது ஃபெயிலியர் விசிட்டாக, மாவட்ட மக்களை ஏமாற்றிய விசிட்டாக உள்ளது. விராலிமலை இடைத்தேர்தலுக்காக வரவில்லை என்று சொல்கிறார். ஆனால் விராலிமலையில் தேர்தல் தேதி அறிவிக்கவில்லை, யார் வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை, ஆனால் தீபாவளிக்கு ஒரு வீட்டிற்கு 2,000 ரூபாய் மதிப்புள்ள இனிப்பு, டம்ளர் போன்ற பரிசு பொருட்களை விநியோகிக்க விஜயபாஸ்கர் தொடங்கியுள்ளார்.
வாக்குக்கு எதுவும் கொடுக்கமாட்டோம் என்று சொல்லக்கூடிய தூய ஆட்சியில் 90 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தவறாமல் கொடுத்து வருகிறார். மற்றவர்களுக்கு ரொக்கமாகவும் கொடுத்து வருகிறார். தேர்தல் வருவதற்கு முன்பு இப்போதே பணப்பட்டுவாடா தொடங்கிவிட்டார்கள் என்றால் எத்தனை கோடிகளை எங்கு கொட்டப்போகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். விராலிமலை தேர்தலுக்காக வரவில்லை என்று சொன்னாலும், தேர்தலுக்காக பணம் பொருட்கள் கொடுக்க தொடங்கி விட்டார்கள். இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் எல்லாம் நலத்திட்டங்கள் உதவிகள் வழங்குவதால் வாக்குகளை பெற்றுவிடலாம் என்று தப்பு கணக்கு போடுகிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.