

காவிரி திறப்பு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் - கர்நாடகா இடையிலான பதற்றம் சமீபத்தில் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடகா முதலமைச்சரை சந்திக்க உள்ளதாகவும், ஆலோசனைக்குப் பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் செய்திகள் வெளியானது. ஆனால் நேற்று கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், விஜயின் பயணத்தை தற்போதைக்கு தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர் தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையின் அளவைப் பொறுத்து, தமிழகத்திற்கு கர்நாடகா நீர் திறந்து விட வேண்டியது தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகி, நீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை அமைப்புகள் வரை இந்த விவகாரம் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் காவிரி நீரை திறந்துவிடக் கோரி வலியுறுத்தப்பட்டது. "உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கர்நாடகா தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை மாதந்தோறும் வழங்கவில்லை. இதனால் பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்னும் திறக்கப்படவில்லை. எனவே, கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாக திறந்துவிட உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த கர்நாடக அரசு, மாநில அணைகளில் 50 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளதாகவும், மாநிலத்தின் குடிநீர் தேவைக்கே தற்போதுள்ள நீர் அவசியமாக இருப்பதாகவும் தெரிவித்தது. எனவே, தமிழகத்திற்கு நீர் திறந்துவிட இயலாது என மறுத்தது. ஆனால், இதை ஏற்க மறுத்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, ஜூலை 29 முதல் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
இருப்பினும், கர்நாடக அரசு இதுவரை நீரை திறந்துவிடவில்லை. இதற்கிடையில், கன்னட அமைப்பினர் தமிழக முதலமைச்சர் விஜயின் வருகையை எதிர்த்து அவரது திரைப்பட போஸ்டர்களை கிழித்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வரும் நிலையில், மாநிலத்தின் பாதுகாப்பு கருதி உபரி நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். காவிரி நீர் திறப்பு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியாவில் கன்னட அமைப்புகள் மற்றும் விவசாயிகளின் கடையடைப்பு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்தப் போராட்டத்தை கைவிடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல. தமிழ்நாட்டிற்கு எதிரான கடையடைப்பு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளில் அதிக நீரை தேக்கி வைத்தால் வெள்ள அபாயம் ஏற்படும். எனவே, தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடுவதற்கு எதிரான முழு கடையடைப்பு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளுக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், பொதுமக்கள் அமைதியை கடைப்பிடித்து, போராட்டங்களை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.