

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கரூர் வேலுசாமிபுரம் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ தற்போது சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரம்மாண்டமான அரசியல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. நடிகர் விஜய் பங்கேற்ற இந்தக் கூட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. கூட்ட ஏற்பாடுகளில் இருந்த குளறுபடிகள் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்துப் பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் எழுந்தன.
இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இதன் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையைத் தொடங்கிய சிபிஐ அதிகாரிகள், சம்பவம் நடந்த வேலுசாமிபுரம் மைதானத்தில் விரிவான கள ஆய்வு நடத்தினர். அப்போது பல்வேறு தடயங்களையும் தகவல்களையும் அவர்கள் சேகரித்தனர். இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், சம்பவத்தின் போது பணியில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் எனப் பல தரப்பினரிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை மேற்கொண்டுள்ளது.
இதுவரை இந்த வழக்கு தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. குறிப்பாக, தவெகவின் முக்கிய நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்குச் சம்மன் அனுப்பப்பட்டு, அவர்கள் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த விசாரணையில் கூட்ட ஏற்பாடுகள் மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்துக் கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், கரூரின் அப்போதைய மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
நிர்வாகிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, தற்போது கட்சியின் தலைவரான நடிகர் விஜய்க்கே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டங்கள் மற்றும் பரப்புரைத் திட்டமிடல்கள் குறித்து அவரிடம் தகவல்களைப் பெற சிபிஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. வரும் 12-ஆம் தேதி அவர் விசாரணைக்கு ஆஜராகும்போது, இந்தச் சம்பவம் தொடர்பான பல முக்கிய உண்மைகள் வெளிவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சம்மன் நடவடிக்கை தமிழக அரசியலில் தவெக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசாரணைக்குப் பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.