
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய கரூர் பொதுக்கூட்டத்தில் துயர சம்பவ நிகழ்வில், இதுவரை விஜய் மீது நடவடிக்கை எடுக்காமல் ஸ்டாலின் இருந்தாலும், இது அவரது பக்காவான அரசியல் நகர்வு என்றும் கலைஞரை விட மிக சாதுர்யமாக இந்த விவாகரத்தை கையாள்வதாகவே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
கரூர் பொதுக்கூட்டத்திற்கு, 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று தவெக நிர்வாகம் அனுமதி கோரியிருந்தது. ஆனால், காவல்துறை அறிக்கையின்படி, 27,000க்கும் அதிகமானோர் கூடினர். நடிகர் விஜய் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் சுமார் 7 மணி நேரம் தாமதமாக வந்ததாலும், அனுமதியற்ற ரோட் ஷோ நடத்தியதாலும், கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதாக காவல்துறை முதற்கட்ட விசாரணையில் (FIR) தெரிவித்துள்ளது. நெரிசலில் சிக்கியவர்களுக்கு உதவ, தவெக-வைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்றும், பல நிர்வாகிகளும் உடனடியாக சம்பவ இடத்திலிருந்து வெளியேறிவிட்டனர் என்றும் உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்த சம்பவத்தில் கரூர் மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன், நகரச் செயலாளர் பொன்ராஜ் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளின் மீது கொலை, ஆட்கடத்தல் மற்றும் பொதுப் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் விஜய் மீதும் அவரது கட்சி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க, ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், உரிய விதிமுறைகள் (SOP) வகுக்கப்படும் வரை, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அரசியல் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தக் கூடாது என்றும் தடை விதித்தது.
கூட்ட நெரிசலுக்குப் பிறகு, பெரும்பாலான தவெக நிர்வாகிகள் கைது நடவடிக்கைக்கு அஞ்சி தலைமறைவாக உள்ளனர். ஏற்கெனவே மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். உயர் நீதிமன்றத்தின் கடுமையான கண்டனங்கள் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளதால், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவே பலர் பொதுவெளியில் வருவதைத் தவிர்த்து வருகின்றனர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் கட்சியின் பொறுப்பாளர்கள் மக்களை கைவிட்டு ஓடிவிட்டனர் என்ற உயர் நீதிமன்றத்தின் குற்றச்சாட்டு, அவர்களின் தற்போதைய நிலைக்கான ஒரு காரணமாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, நடிகர் விஜய் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) அலுவலகத்தில் அனுமதி கோரியுள்ளார். இந்த நிமிடம் வரை அவருக்கு நேரடியாக செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. எனினும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் ரூ. 20 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் அறிவித்தார். அத்துடன், ஒரு வீடியோ செய்தியையும் வெளியிட்டு "உண்மை விரைவில் வெளிவரும் என்றும் எனது தொண்டர்கள் மேல் கை வைக்காதீங்க சிஎம் சார்.. என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கோங்க" என்று குறிப்பிட்டார்.
எனினும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக, நடிகர் விஜய் மீதோ அல்லது அவரது கட்சி மீதோ நேரடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வருகிறார். உயர் நீதிமன்றம், "விஜய் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம்?" என்று அரசுத் தரப்பை நோக்கி கேள்வி எழுப்பியும், முதல்வர் தனது அணுகுமுறையில் மிகவும் நிதானத்துடனே செயல்படுகிறார்.
நெரிசல் நடந்த உடனேயே, முதல்வர் ஸ்டாலின் கரூருக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களையும், காயமடைந்தவர்களையும் சந்தித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்தார். மேலும், "கூட்ட நெரிசல் சம்பவம் மனதை கலங்கடித்துவிட்டது. இதில் அரசியல் செய்ய விரும்பவில்லை" என்று தனது வேதனையைப் பதிவு செய்தார். முதல்வர் ஸ்டாலினின் இந்த "மௌனம்" மற்றும் "நிதானம்" ஒரு ஆழமான அரசியல் சாதுரியத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய்யைக் கைது செய்வதோ அல்லது அவர் மீது நேரடி நடவடிக்கை எடுப்பதோ, அவருக்கு "தியாகி" என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி, அரசியல்ரீதியாக அவருக்கு பொதுமக்களின் அனுதாபத்தைப் பெற்றுத் தர வாய்ப்புள்ளது. இது தேர்தல் அரசியலில் திமுகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம். இதனை நன்கு உணர்ந்தே ஸ்டாலின் செயல்படுகிறார். நீதிமன்றமே கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதால், காவல்துறை அதன் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே, ஆளுங்கட்சி நேரடியாகத் தலையிட்டு விஜய்யை குறிவைக்க வேண்டிய அவசியம் இல்லை. சட்டத்தின் வழியே செல்ல விடுவதன் மூலம், நடுநிலைத்தன்மையைப் பேணிக்காப்பதுடன், அரசியல் பழிவாங்கல் என்ற விமர்சனத்தையும் தவிர்க்க ஸ்டாலின் நினைக்கிறார்.
முந்தால் என்னை தொட்டுப் பாருங்க என்ற ரீதியில் விஜய் வீடியோ வெளியிட்டும் கூட, அதை கொஞ்சம் கூட முதல்வர் கண்டுகொள்ளாமல் இருப்பது, இப்போது "அதிரடி" காட்டுவதை விட, "விவேகத்துடன்" செயல்படுவதன் மூலம், விஜய்யை சட்டப் போராட்டத்திலேயே திக்கு தெரியாமல் தள்ளாட வைக்கிறார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்கிடையில், விஜய்க்கு பாஜக ஆதரவாக இருப்பதாகவும், தவெகவுடன் கூட்டணி வைக்க, ஆந்திர முதல்வர் பவன் கல்யாண உதவியுடன் பாஜக பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த போக்கே விஜய்யின் அரசியலை அஸ்தமனம் ஆக்கிவிடும் என்று உறுதியாக நம்புகிறாராம் முதல்வர் ஸ்டாலின்.
ஸ்டாலினின் இந்த ஒவ்வொரு மூவையும் பார்த்து, அடேங்கப்பா! இவர் அரசியலில் கலைஞருக்கே ஒரு ஸ்டெப் மேலே போயிடுவார் போலயே என்று முணுமுணுக்கின்றனராம் விவரம் அறிந்தவர்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.