"தலைநகரிலேயே பாதுகாப்பில்லாத அவல நிலை... தவெக ஆட்சியில் தூங்குகிறதா காவல்துறை?" - முதல்வரை கேள்விகளால் சாடிய பாஜக மாநில தலைவர்!

வாழ்வாதாரம் தேடி தமிழகத்தை நம்பி வந்த ஏழைத் தொழிலாளியின் குழந்தைக்குத் தலைநகரிலேயே பாதுகாப்பில்லாத அவல நிலையை எண்ணி நெஞ்சம் பதறுகிறது.
Nainar Nagendran X post
Nainar Nagendran X post
Published on: 
Updated on: 
2 min read

நேற்று (அக் 07) சென்னை திருவொற்றியூரில் வடமாநில தம்பதியினரின் 5 வயது குழந்தையை பீகாரை சேர்ந்த நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தில், குழந்தையின் பெற்றோர் குழந்தைக்கு உடல் நலமில்லை என்று நினைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது, அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிறுமியிடம் விசாரித்த பெற்றோர் அருகில் இருந்த வடமாநில இளைஞர் ஒருவர், அவரது அறைக்கு அழைத்து சென்றதாக சிறுமி கூறியதை அடுத்து பொதுமக்கள் அவரை வளைத்து பிடித்த தர்ம அடிக் கொடுத்துள்ளனர். மேலும், அவருடன் தங்கி இருந்த இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், அதில் ஒருவர் தப்பி ஓடியுள்ளதாகவும் அவரை போலீசார் வலைவீசி தேடிவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக காவல்துறை போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது, இந்த சம்பவத்திற்கு, தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார். தனது அதிகாரப்பூர்வ X தளத்தில், "தலைநகரில் 5 வயது குழந்தைக்குக் கூடப் பாதுகாப்பில்லை: திரு. ஜோசப் விஜயின் தவெக ஆட்சியில் தூங்குகிறதா காவல்துறை?!

சமீபத்தில் கும்மிடிப்பூண்டியில் 3 வயது பிஞ்சுக் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட கொடூரச் சம்பவத்தின் துயரத்திலிருந்தே நாம் இன்னும் மீளவில்லை; அதற்குள் அடுத்த கொடூரமாக, சென்னை திருவொற்றியூரில் வடமாநிலத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த 5 வயது பிஞ்சுக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியிலும் பெருந்துயரிலும் ஆழ்த்தியுள்ளது. வாழ்வாதாரம் தேடி தமிழகத்தை நம்பி வந்த ஏழைத் தொழிலாளியின் குழந்தைக்குத் தலைநகரிலேயே பாதுகாப்பில்லாத அவல நிலையை எண்ணி நெஞ்சம் பதறுகிறது.

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான இத்தகைய கொடூரங்கள் தமிழகத்தில் அடுத்தடுத்துத் தொடர்கதையாகி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. வெற்றுப் பேச்சுகளால் அமைந்த தவெக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் முடங்கிவிட்டது. காவல்துறையையும் உள்துறையையும் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் செயலற்றுக் கிடப்பதால், பொதுமக்களே வீதியில் இறங்கிக் குற்றவாளிகளைப் பிடிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது. குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீதான பயம் துளியும் இல்லாமல் போனதற்கும், குற்றங்கள் தலைவிரித்தாடுவதற்கும் இந்த ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடும் அனுபவமின்மையுமே முக்கியக் காரணம்.

இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் விரைவு நீதிமன்றம் மூலம் அதிகபட்சத் தண்டனையைப் பெற்றுத் தருவதோடு, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசே உயர்தர மருத்துவ சிகிச்சையை முன்னின்று வழங்க வேண்டும். இனியாவது வெற்றுப் பிம்ப அரசியலை விட்டுவிட்டு, பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் உடனடியாகக் களத்தில் இறங்கிக் கவனம் செலுத்த வேண்டும்; சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்றத் தவறினால், தவெக அரசுக்குத் தமிழக மக்கள் நிச்சயம் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்று தனது கருத்தினை காட்டமாக பதிவிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com