

தமிழக முதலமைச்சர் விஜய் அரசியலில் மட்டுமல்ல, இப்போது ஃபேஷன் உலகிலும் புதிய டிரெண்டாகி வருகிறார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவர் தொடர்ந்து அணிந்து வரும் கருப்பு பிளேசர், வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் காம்போ தற்போது இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் பிரபல ஆடை விற்பனை நிறுவனமான ‘தி சென்னை சில்க்ஸ்’, விஜய்யின் “CM Look”-ஐ மையமாக வைத்து சிறப்பு காம்போ ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. கருப்பு கோட்டு, வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேண்ட் அடங்கிய இந்த பேக்கேஜ் ரூ.3,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. திருநெல்வேலி கிளையில் இந்த உடைக்கு ஏற்கெனவே நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் விளம்பர போஸ்டர்களில், “முதல்வர் விஜய் ஸ்டைல்” என்ற வகையில் இந்த ஆடை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ரசிகர்கள் பலர் இதை கொண்டாடி வருவதோடு, “இதுதான் அடுத்த டிரெண்ட்”, “CM Fashion Fever” போன்ற ஹாஷ்டேக்குகளும் இணையத்தில் பரவி வருகின்றன.
வாடிக்கையாளர்கள் ஆடைகள் மட்டுமல்லாமல், விஜய்யின் அரசியல் தோற்றத்தை முழுமையாக பின்பற்றும் வகையில் காலணிகள், பெல்ட் போன்ற அணிகலன்களையும் கேட்டு வருவதாக விற்பனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். “காலணிகள் ரூ.1500 முதல், பெல்ட் ரூ.800 முதல் கிடைக்கிறது. சிலர் முழு செட்டாகவே வாங்கிச் செல்கிறார்கள்,” என கடை ஊழியர் ஒருவர் கூறியுள்ளார். விஜய்யின் இந்த புதிய அரசியல் பிம்பம், தமிழக அரசியலில் நீண்ட காலமாக நிலவி வந்த வெள்ளை சட்டை – வேட்டி கலாச்சாரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களித்த வாக்காளர்களிடம் இந்த “மாடர்ன் CM லுக்” மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரச்சார காலத்திலேயே விஜய் அணிந்த எளிமையான வெள்ளை சட்டை மற்றும் பழுப்பு நிற பேன்ட் கூட ரசிகர்களிடையே டிரெண்டாக மாறியிருந்தது. வாக்குப்பதிவு நாளில் கூட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அதே போன்ற உடைகளில் வாக்குச்சாவடிகளுக்கு வந்த சம்பவம் கவனம் பெற்றது. இப்போது முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, விஜய்யின் “கருப்பு பிளேசர் லுக்” தனி அரசியல் அடையாளமாக மாறி வருகிறது. “இது சாதாரண உடை இல்லை... புதிய தலைமுறை அரசியலின் சின்னம்,” என சில இணைய பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆனால் மறுபுறம், பதவியில் இருக்கும் முதலமைச்சரின் தோற்றத்தை வணிக ரீதியாக பயன்படுத்துவது சரியா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பியுள்ளனர். இருப்பினும், சினிமா, அரசியல், இளைஞர் கலாச்சாரம் மற்றும் ஃபேஷன் — இந்த நான்கையும் ஒரே நேரத்தில் இணைத்து தமிழ்நாட்டில் புதிய டிரெண்ட் உருவாக்கியிருப்பது விஜய்யின் தனித்துவமான ஈர்ப்பை மீண்டும் நிரூபித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.