முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து? விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன் கைது!

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அழைத்துவரப்பட்டு..
MLA மார்க்கண்டேயன்
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசும் போது, “சட்டமன்றத்தை கூட்டும் போது உனக்கு (விஜய்) எலும்பு இருக்காது உடைத்து விட்டு தான் அனுப்புவோம், சட்டமன்றத்தை கூட்டிப்பார்” என்று முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசி இருந்தார்.

இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் MLA மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தமிழக வெற்றி கழகத்தினர் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்திருந்தனர். தற்போது இந்த புகாரின் அடிப்படையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகமுதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசியதாக, விளாத்திக்குளத்தில் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தற்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அழைத்துவரப்பட்டு தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

முதலமைச்சரை மிரட்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்  மீது 351 (3), 352, 353 (2) BNS ஆகிய 3 பிரிவுகளில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. அவரை கைது செய்யும் போது திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் காவல்துறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தற்போது திமுகவின் முக்கிய தலைவர்களும் காவல்துறையின் இந்த அதிரடி கைது நடவடிக்கைக்கு  கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

BNS 351 (3) – கடுமையான குற்ற மிரட்டல். அதாவது ஒருவரை கொலை செய்வதாக, கடுமையான காயம் ஏற்படுத்துவதாக அல்லது மிகக் கடுமையான குற்றத்தைச் செய்வதாக மிரட்டுவது இந்தப் பிரிவின் கீழ் வரும். BNS 352 – அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்டு அவமதித்தல். அதாவது ஒருவரை வேண்டுமென்றே அவமதித்து, அதனால் பொது அமைதி குலையவோ அல்லது அவர் குற்றச் செயலில் ஈடுபடவோ தூண்டும் வகையில் நடந்து கொண்டால் இந்தப் பிரிவு பொருந்தும். BNS 353 (2) – சமூகங்களுக்கு இடையே பகைமையை தூண்டும் பொய்யான தகவல் பரப்புதல். மதம், இனம், மொழி, சாதி, சமூக அடிப்படையில் வெறுப்பு, பகைமை அல்லது விரோத உணர்வை உருவாக்கும் நோக்கில் பொய்யான தகவல், வதந்தி அல்லது பதற்றம் ஏற்படுத்தும் செய்திகளை பரப்புதல். இந்த மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com