கையில் இவ்வளவு பெரிய 'இளைஞர் சேனை' இருந்தும்.. கோட்டையை பிடிப்பதில் கோட்டை விடுகிறாரா விஜய்?

மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைஞர்கள் ஆதரவு முழுவதுமாக ஆரம்பத்தில் தவெக பக்கம் இருந்தது. ஆனால் அதனை விஜய் தவற விட்டுவிட்டார்
TVK vijay
Published on
Updated on
2 min read

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்துடன், விஜய், தனது தமிழக வெற்றி கழக கட்சியினை 2024 பிப்ரவரி 2ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கட்சியின் கொடி 2024 ஆகஸ்ட் 22ம் தேதி சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், தமிழக நலன், ஊழல் ஒழிப்பு மற்றும் சமூக நீதி ஆகியவற்றை நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்படுவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கும் இளைஞர்கள் அந்த மாற்றத்தை தருவது விஜய்யாக இருக்கலாம் என்று, ஒரு ஆதரவு கூட்டமும், விஜய்க்கு ரசிகர்களாக இருந்தவர்கள் அவர் கட்சி தொடங்கியதும், அப்படியே அவருக்கு ஆதரவு அளிக்கும் தொண்டர்கள் கூட்டமாக மாறியது. இதனால் விஜய் குறுகிய காலத்திலேயே பெயர்சொல்லும் அரசியல் தலைவராக மாறினார். ஆனால் இவ்வளவு பெரிய இளைஞர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் கோட்டையை பிடிக்க தவறுவது ஏன்?.

தேர்தல் களம்:

தற்போது சூடு பிடித்து வரும் 2026 தேர்தல் சூழலில் பல கட்சிகளின் அரசியல் தலைவர்களும் அனல் பறக்க தங்களது தேர்தல் பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் செய்துவருகின்றனர். அதேபோல் விஜய் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அது பொய்த்து போனது என்றே கூறலாம். தினமும் அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் தவெக தலைவர் விஜய் 2 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ச்சியாக மக்களிடையே தேர்தல் பிரச்சாரம் செய்யமுடியாமல் போக காரணமாக தவெக சார்பில் கூறப்படுவது, "காவல் துறையால் அனுமதி மறுக்கப்படுவதே" என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. மக்களில் பலரும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தற்போது இருக்கும் அரசியல் கட்சிகளின் மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர். மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைஞர்கள் ஆதரவு முழுவதுமாக ஆரம்பத்தில் தவெக பக்கம் இருந்தது. ஆனால் அதனை விஜய் தவற விட்டுவிட்டார். இந்த தேர்தல் பிரச்சார களத்தை கச்சிதமாக பயன்படுத்தி இருந்தால் கட்டாயம் விஜய் தமிழக அரசியலில் தவிர்க்கமுடியாத தலைவராக மாறியிருக்க முடியும். ஆனால் அதை அவர் சரியாக பயன்படுத்தாத காரணத்தால் விஜய்க்கு அது ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

ஒழுங்குபடுத்த தவறியதா தலைமை?:

தற்போது இருக்கும் அரசியல் சூழலில் தவெக தலைவர் விஜய்க்கு ஒரு பெரிய இளைஞர்கள் பட்டாளமே பின்னால் நிற்கிறது. அந்த வரிசையில் அவரின் ரசிகர் கூட்டமே தொண்டர் கூட்டமாக மாறியுள்ளது. இது விஜய்க்கு ஒரு மிகப்பெரிய ஒரு பலமாக பார்க்கப்படுகிறது. வேறு எந்த ஒரு கட்சிக்கும் இல்லாத இந்த மிகப்பெரிய இளைஞர்கள் பட்டாளத்தை விஜய் பயன்படுத்தினாரா? என்று கேட்டால் அது மிகப்பெரிய கேள்விக்குறிதான். காவல்துறையால் பலமுறை எச்சரிக்கப்பட்டும், அறிவுரை வழங்கியும் கூட தவெக தலைவர் விஜயை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தால் விஜய் செல்லும் வாகனத்திற்கு பின்னால் சென்று விபத்திற்கு உள்ளாவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். மற்ற கட்சியினரை அவதூறாக பேசுவது போன்ற வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடுவதை தடுக்க விஜய் தவறிவிட்டார். குறிப்பாக, 'விரிட்சுவல் வாரியர்ஸ்' என்று அழைக்கப்படும் தவெகவை சேர்ந்த சிலர், சமூக வலைத்தளத்தில் தவெக மீதும், அதன் தலைவர் மீதும் விமர்சனங்களை வைத்தால், விமர்சனங்கள் வைப்பவர்கள் மீது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவது, குறிப்பாக பெண்களை நோக்கி ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவது போன்றவைகளில் ஈடுபட்டு வருவதை கூட கட்சி தலைமையோ அல்லது கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளோ கண்டிக்கவும், ஒழுங்குபடுத்தவும் தவறியதும் கோட்டையை பிடிப்பதில் தடுமாற்றம் காண ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கருத்து ரீதியான பரிமாற்றமாக இல்லாமல் தனிநபர் தாக்குதலாகவே இந்த மோதல் இருந்து வருகிறது.

இளைஞர்களை கவர தவறினாரா?

தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் போது எல்லாம் திமுகவை விமர்சித்த வண்ணமே இருப்பதும், அந்த தொகுதிக்கான பிரச்சனைகளை பற்றி பேசுவதும், அந்த தொகுதிக்கான திட்டங்கள் குறித்து பேசுவதும் குறைவாகவே இருப்பதால் சில இளைஞர்கள் மத்தியில் தவெக மீதும், விஜய் மீதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது தேர்தல் அறிக்கையிலேயே பல விமர்சனங்கள் இருப்பதால் சில இளைஞர்கள் தவெக மீது அதிருப்தியில் இருக்கின்றனர். தவெகவை சேர்ந்த சிலர் சமூகவலைத்தளத்தில் தனிநபரை தாக்குவது போன்று பேசுவது, கட்சி நிர்வாகிகள் மீதே சிலருக்கு இருக்கும் அதிருப்தி போன்ற காரணங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர். இதனால் இளைஞர்களில் சிலர் தவெகவை புறக்கணித்து வருகின்றனர்.

இதுபோன்ற பல காரணங்கள் விஜய் இளைஞர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருந்தாலும், அவரால் கோட்டையை பிடிக்கமுடியவில்லை. தவெக தலைவர் விஜய் அமைதியாக இருந்த போதிலும் கூட, சில தொகுதிகளுக்கு அவர் சென்று வாக்கு சேகரித்த போதிலும் அவருக்கென்று கூடும் கூட்டம் பெருமளவில் திரள்கிறது. மக்கள் மத்தியில் அதிகப்படியாக வந்து விஜய் பேசினால், மக்களின் அமோக ஆதரவு அவருக்கு கிடைத்து வெற்றி பெற முடிவும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com