“மக்களை திசைதிருப்ப நாடகமாடுகிறதா தவெக?” - கனிமொழி சரமாரி கேள்வி.. கலந்தாய்வுக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிக்கை!

கட்சிக் கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்ட நிலைப்பாட்டை மீண்டும் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை...
cm vijay and kanimozhi
cm vijay and kanimozhi
Published on
Updated on
2 min read

தமிழக வெற்றிக் கழக அரசு இன்று நடத்தும் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், ஏற்கனவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களே திமுகவின் நிலைப்பாடு என்றும் அவர் கூறியுள்ளார்.  இதுதொடர்பாக கனிமொழி கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை முதன்முதலில் எடுத்துரைத்து எச்சரித்தவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எனக் குறிப்பிட்டுள்ளார். 

அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தி, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றியதுடன், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை சென்னைக்கு அழைத்து கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தையும் நடத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும், 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்பட வேண்டும் என்பதுடன், தமிழ்நாட்டின் தற்போதைய 7.18 சதவீத நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் எந்தக் காரணத்திற்காகவும் குறைக்கப்படக் கூடாது என்பதே தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடு என்றும்,தொகுதி மறுவரையறை தொடர்பாக ஒன்றிய அரசு தற்போது எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், ஏற்கனவே அனைத்து கட்சிக் கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்ட நிலைப்பாட்டை மீண்டும் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதுகுறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாமல் தொகுதி மறுவரையறை தொடர்பாக மட்டும் அவசரமாக ஆலோசனைக் கூட்டம் நடத்துவது மக்களை திசைதிருப்பும் அரசியல் நாடகம் என கனிமொழி விமர்சித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அந்தக் கோரிக்கையை ஏற்காமல் தமிழக வெற்றிக் கழக அரசு மவுனம் காப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

இதன் காரணமாக இன்று நடைபெறும் தொகுதி மறுவரையறை தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், காவிரி உரிமை மற்றும் டெல்டா விவசாயிகள் மீது தமிழக அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால், மேகதாது அணைக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரிடம் நேரில் வழங்க தமிழக அரசு பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார். “தமிழ்நாடு அரசின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்ப முதலமைச்சர் தயாரா?” என கேள்வி எழுப்பியுள்ள கனிமொழியின் இந்த அறிக்கை, தொகுதி மறுவரையறை மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கும் தி.மு.க.வுக்கும் இடையிலான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com