"26 கட்சிகளின் கூட்டணியை தனித்து வென்றார்" - சட்டமன்றத்தில் முதல்வர் புகழாரம்.. அமைச்சர் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

"வேளாண் நிதிநிலை அறிக்கையை மட்டும் படித்தால் போதும்" என்று அறிவுறுத்தினார்
TN Agriculture Budget
minister vinoth
Published on
Updated on
2 min read

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது, அமைச்சர் வினோத் முதல்வர் விஜய்யை தொடர்ந்து புகழ்ந்து பேசியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் குறுக்கிட்டு, "அவை முன் வைக்கப்பட்டுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையை மட்டும் படித்தால் போதும்" என்று அமைச்சருக்கு அறிவுறுத்தினார்.

வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தொடங்கிய அமைச்சர் வினோத், "உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி உரையைத் தொடங்கினார். பின்னர் முதல்வர் விஜய்யை, "பணநாயகத்தை தோற்கடித்த பாமரனின் ஜனநாயகன்", "ஊழலைத் தலையெடுத்த… கோட் சூட் போட்ட விவசாயி" உள்ளிட்ட வார்த்தைகளால் பாராட்டிப் பேசினார். மேலும், "திரை மன்றத்தில் மட்டுமல்ல.. சட்டமன்றத்திலும் நாயகன் நீங்கள் தான்" என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழக வெற்றி கழகத்தின் சின்னமான விசிலையும் புகழ்ந்து உவமைகளைக் கொட்டித் தீர்த்தார். அதில், "விசில் என்பது ஒலி அல்ல; அது பாமரர்களின் மொழி.. அதுவும் உலகின் பொது மொழி. விசில் காற்று இசைத்த முதல் ராகம், மனிதன் பயன்படுத்திய முதல் தொலைபேசி" என்றும் புகழாரம் சூட்டினார். அமைச்சர் தொடர்ந்து முதல்வரை புகழ்ந்து பேசியதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், குறிப்பாக திமுக உறுப்பினர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனாலும் அமைச்சர் வினோத் உரையை நிறுத்தாமல் முதல்வரை புகழ்ந்து கொண்டே இருந்தார்.

அதன் பின்னர் அமைச்சர் வினோத், வேளாண் நிதிநிலை அறிக்கையின் விவரங்களை வாசித்து தாக்கல் செய்வதைத் தொடர்ந்தார். மீண்டும், "தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி ஒன்று நீங்கள் பேசுவதாக இருக்கும்; இல்லை உங்களைப் பற்றி பேசியதாக இருக்கும்" என்றும் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், "அவை முன் வைக்கப்பட்டுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையை மட்டும் படித்தால் போதும்" என்று அறிவுறுத்தினார்.

அதையடுத்து வேளாண் பட்ஜெட்டை வாசித்த அமைச்சர் வினோத், பல்வேறு திட்டங்கள், அவற்றின் நோக்கம் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை அறிவித்தார். பின் முடிவுரையின் போது முதல்வர் விஜய்யை மீண்டும் புகழும் வகையில் உரையாற்றினார். அதில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் குறித்து, "தேர்தல் களத்தில் எங்கள் தளபதி 26 கட்சிகளின் கூட்டணியையும், இன்னொரு கூட்டணியையும் தனித்து வெற்றி கொண்டார்" என்று குறிப்பிட்டார். மேலும், அதனால் தான் அவர் "ட்ரூ லீடர்" என்று புகழாரம் சூடிய நிலையில், எதிர்க்கட்சிகள் மீண்டும் குறுக்கிட்டு இதைத் தவிர்க்குமாறு கூச்சலிட்டனர்.

அப்போது அவையின் சபாநாயகர் இடையில் குறுக்கிடாமல் பொறுமை காத்திருந்தார். இதனால் அவை மேலும் சலசலப்புக்கு உள்ளானது. அமைச்சர் தனது உரையை முடித்த பின் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், "முடிகின்ற போது குறுக்கிடாமல் நான் பொறுத்திருந்தேன்" என்று எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்தார். மேலும், "நான் முதலிலேயே குறிப்பிட்டு விட்டேன்" என்றும் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை அல்லது வேறு எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் தாக்கல் செய்யப்படும் போது, அவை நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்ட பொருளை மட்டுமே உறுப்பினர்கள் முன்வைக்க வேண்டும் என்பது நடைமுறையாகும். உரை அவை நடவடிக்கையிலிருந்து விலகுகிறது என்று சபாநாயகர் கருதினால், அதை தொடர்புடைய விஷயத்திற்கு மட்டுமே வரையறுக்குமாறு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தும் அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com