“மானம், ரோஷம் இல்லையா?” - காங்கிரஸை கடுமையாக சாடிய பரந்தாமன்! தலைவர்கள் பெயர் நீக்கப்பட்ட விவகாரத்தில் கண்டன அறிக்கை

"விஜய் போற்றி பாடும் பஜனை மடமாகிவிட்ட சத்தியமூர்த்தி பவனை ‘விஜய்பவன்’ என மாற்றிக் கொள்ளுங்கள்..."
DMK Paranthaman
Published on
Updated on
2 min read

தமிழக சட்டமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர் மானிய கோரிக்கை தொடர்பான கொள்கை குறிப்பேட்டில், முந்தைய அரசாங்கத்தில் இருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது அரசியல் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

அதையடுத்து திமுகவின் சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் தற்போது ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இது குறித்து காங்கிரஸ் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் விமர்சித்துள்ளார். அதில் “தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு ஆகியோருக்கு மிகப் பெரிய அவமரியாதை செய்துவிட்டது விஜய் அரசு” என்றும் இந்த போக்கு “ஒட்டுமொத்த சமூக நீதிப் போராளிகளையும் கொதித்தெழச் செய்திருக்கிறது, தலைவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் போது, சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் கொள்கை விளக்கக் குறிப்பை அவையில் தாக்கல் செய்வது வழக்கம். ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை விவாதம் தொடங்குவதற்கு முன்பும், அந்தத் துறையின் அமைச்சர் கொள்கை விளக்கக் குறிப்பை படித்ததாக அவை நடவடிக்கைக் குறிப்பில் பதிவு செய்யப்படும். இந்நிலையில், அமைச்சர் சம்பத்குமார் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், ‘இடஒதுக்கீடு’ தொடர்பான பகுதியில் பெரியார், அம்பேத்கர் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டுமின்றி, அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் இந்தத் தலைவர்களின் பெயர்கள் கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெற்றிருந்ததாக பரந்தாமன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கொள்கை விளக்கக் குறிப்பை தயாரிக்கும்போது முந்தைய ஆண்டின் குறிப்பேட்டில் உள்ள அடிப்படை தகவல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி, தேவையான புதிய தகவல்கள் மட்டுமே சேர்க்கப்படுவது வழக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், இந்தப் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது தற்செயலானது அல்ல என்றும், இதற்குப் பின்னால் உள்நோக்கம் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் பெரியார், அம்பேத்கர் மற்றும் நேருவின் பங்களிப்பு முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ள பரந்தாமன், அவர்களின் பெயர்களை அரசு ஆவணங்களில் இருந்து நீக்குவது வரலாற்றுத் துரோகம் என விமர்சித்துள்ளார். மேலும், தவெகவின் கொள்கைத் தலைவர்களாக பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலையம்மாள் ஆகியோர் குறிப்பிடப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், பெரியார் மற்றும் அம்பேத்கருக்கு முதல்வர் விஜய் அளிக்கும் மரியாதை இதுதானா என கேள்வி எழுப்பியுள்ளார்.

“மேடையில் முழங்க பெரியாரும் அம்பேத்கரும் வேண்டும். ஆனால், அவர்களின் இடஒதுக்கீட்டுத் தியாகம் மட்டும் வேண்டாமா?” என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், பெரியார் மற்றும் அம்பேத்கரை கட்சியின் ‘பிராண்ட் அம்பாசிடர்களாக’ மட்டுமே பயன்படுத்துகிறார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் நேருவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முதலாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தமும், அதற்குப் பின்னால் இருந்த பெரியார், அம்பேத்கரின் சமரசமற்ற சமூக நீதிப் போராட்டங்களும்தான் இன்று தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் அனுபவிக்கும் 69 % இட ஒதுக்கீட்டின் அடித்தளம். அந்த வரலாற்றையே கிழித்தெறிய முற்படுகிறது தவெக அரசு. நேரு பெயரை நீக்கியிருக்கிறார்களே… காங்கிரஸ் கட்சிக்கு மானம், ரோஷம், சொரணை இல்லையா? ’விஜய் போற்றி’ பாடும் பஜனை மடமாகிவிட்ட சத்தியமூர்த்தி பவனை ‘விஜய்பவன்’ என மாற்றிக் கொள்ளுங்கள். கதர் கிழிஞ்சா தைக்க முடியாது காங்கிரஸ்காரனை திருத்த முடியாது! காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொண்டே பாஜகவின் நிழல் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது விஜய் அரசு என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

இறுதியாக, கொள்கை விளக்க குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் பெரியார், அம்பேத்கர் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்களை மீண்டும் சேர்த்து, திருத்தப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என திமுக சார்பில் பரந்தாமன் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com