

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சமூக மக்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பு-குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் தங்களுக்கு முறையான நீதி கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்திருந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் மட்டுமின்றி, மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம், விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் இந்த தவறை செய்தது அதே வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த மூன்று நபர்கள் தான் என நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதே ஊரைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தனிப்பட்ட பகை காரணமாக அவர்கள் மூவரும் இந்த செயலில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அது குறித்த வழக்கு புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தங்கள் கிராம மக்களையே அரசும், சிபிசிஐடி போலீஸ்சாரும் குற்றம் சாட்டி உள்ளதாகவும் தங்கள் கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என குற்றம் சாட்டி, மொத்த கிராமமும் இன்றைய சட்டப்பேரவை தேர்தலை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் தங்களது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அந்த கிராமத்தின் நுழைவாயில் பகுதியில் கருப்பு கொடியேற்றி உள்ளனர். அதனைத்தொடர்ந்து அவர்களோடு காவல்துறை அதிகாரிகளும் வருவாய்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை, மேலும் எங்களுக்கு நடந்த அநீதிக்கு நீதியும் கிடைக்கவில்லை மற்றும் அந்த குற்றத்தை எங்கள் மீதே திணிக்க படுவதாக கூறி வேங்கைவயல் மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது முற்றிலும் சாதிய ஆதிக்க போக்கால் செய்யப்பட்ட கொடூர செயல் என்றும், அதற்கு தக்க நீதி வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல் நெல்லை நாங்குநேரி மக்களும் இரட்டை கொலைக்கு நீதி வேண்டி தேர்தலை புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்