

அன்புமணி ராமதாஸ் மற்றும் மருத்துவர் ராமதாஸ் இடையே கடந்த ஓராண்டாக நீடித்து வந்ததாகக் கூறப்பட்ட கருத்து வேறுபாடுகள், கட்சி முடிவுகள் மற்றும் குடும்ப நிலைப்பாடுகள் தொடர்பான மோதல் போக்கு அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசு பொருளாக இருந்தது. மாறி மாறி தந்தை மகன் இடையே வார்த்தை போர்கள் நடைபெற்று வந்த நிலையில் குறிப்பாக பாமகவின் முக்கிய முடிவுகள், தலைமைக் கட்டமைப்பு மற்றும் எதிர்கால அரசியல் திசை குறித்த நிலைப்பாடுகளில் இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்ட நிலையில் அன்புமணி தரப்பினர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தும், ராமதாஸ் தரப்பினர் புதிய கட்சியை தொடங்கியும் சட்டமன்ற தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டனர். மகன் மற்றும் தந்தைக்கு இடையே ஏற்பட்ட இந்த பிளவு கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள மருத்துவர் ராமதாஸ் இல்லத்தில் இன்று ராமதாஸின் 61 வது திருமண நாளை முன்னிட்டு நடைபெற்ற திடீர் சந்திப்பு, அந்த அனைத்து சர்ச்சைகளுக்கும் முடிவுக்கட்டும் வகையில் அமைந்துள்ளது. கட்சி மற்றும் குடும்பத்தில் நீடித்து வந்த பிளவு முடிவுக்கு வந்ததாகக் கூறப்படும் இந்தச் சந்திப்பு, பாமக தொண்டர்கள் மட்டுமின்றி தமிழக அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது. தைலாபுரம் தோட்டத்திற்கு தனது குடும்பத்தினருடன் வருகை தந்த அன்புமணி ராமதாஸ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது தந்தை ராமதாஸை நேரில் சந்தித்துள்ளார். அப்போது இருவரும் கடந்த கால மனக்கசப்புகளை மறந்து பேசிக் கொண்டதாகவும், உணர்ச்சிப் பெருக்கில் அன்புமணி தந்தையை கட்டியணைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் தனது மனைவியுடன் இணைந்து அன்புமணி தந்தை ராமதாஸின் காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பில் அன்புமணியின் அவரது மகள்கள், மருமகன்கள் மற்றும் பேரக்குழந்தைகள் என குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். அப்போது தனது கொள்ளு பேரக்குழந்தைகளை ராமதாஸ் ஆசீர்வதித்ததும் உணர்ச்சிகரமான தருணமாகக் கூறப்படுகிறது. இந்த சமரசம் பாமகவில் நீண்ட காலமாக நிலவி வந்த உட்கட்சி குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீப காலமாக தமிழக அரசியலில் கூட்டணி நகர்வுகள், தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் புதிய அரசியல் சமநிலைகள் உருவாகி வரும் நிலையில், பாமகவின் இந்த ஒற்றுமை முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
திமுக, அதிமுக, மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடுத்த தேர்தலை நோக்கி தங்கள் கூட்டணி மற்றும் வாக்கு வங்கி கணக்குகளை வலுப்படுத்தும் சூழலில், பாமகவின் தலைமை ஒருங்கிணைவு கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த தந்தை–மகன் மீளிணைவு, பாமக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் தேர்தல் அரசியலில் ஒருங்கிணைந்த தலைமை மூலம் புதிய சக்தியாக பாமக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது என மூத்த நிர்வாகிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.