
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அப்போதைய செயலாளர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக லலிதாம்பாள் மற்றும் அவரது சகோதரர் விஸ்வநாதனுக்கு சொந்தமான 17 சென்ட் நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1983 ஆம் ஆண்டு கையகப்படுத்தியது.
அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படாததால் பயன்படுத்தாமல் உள்ள அந்த நிலத்தை திரும்ப வழங்க வேண்டும் என 2003 ஆம் ஆண்டு லலிதாம்பாள் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீரிக்க உத்தரவு பிறப்பித்தது. அதன்படி 10.5 சென்ட் நிலத்தை திருப்பிக் கொடுத்த நிலையில், 6.5 சென்ட் நிலத்தை சாலை விரிவாக்கத்திற்கு தேவை என கூறி வீட்டு வசதி வாரியம் தன் வசம் வைத்துக் கொண்டது.
அந்த நிலமும் உரிய காரணத்திற்கு பயன்படுத்தாததால் அதை திருப்பித் தரக்கோரி அளித்த மனுவை பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் லலிதாம்பாள் மற்றும் விஸ்வநாதன் மீண்டும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரித்து, இரண்டு மாதங்களில் சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு 2023 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி சென்னை பெருநகர வளர்ச்சி குழும அப்போதைய உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்த போது, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மனுதாரர்களை அழைத்து விசாரணை நடத்தி பிப்ரவரி 28ஆம் தேதி விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று உறுப்பினர் செயலர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, குறித்த காலத்தில் உத்தரவை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு என கூறி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அப்போதைய உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, இந்த தொகையை அன்சுல் மிஸ்ராவின் ஊதியத்தில் பிடித்தம் செய்து வழங்க வேண்டும் என்றும் மூன்று வாரங்களில் இழப்பீடு தொகையை வழங்காவிட்டால் மேலும் 10 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேல்முறையீடு செய்ய ஏதுவாக இந்த தண்டனையை நிறுத்தி வைத்த நீதிபதி, குறித்த காலத்தில் மேல்முறையீடு செய்யாவிட்டால் அன்சுல் மிஸ்ரா தண்டனையை அனுபவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உயர் நீதிமன்ற பதிவு துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி வேல்முருகன் மேலும் தனது உத்தரவில், அரசு அதிகாரிகள் கடமை செய்யாததால் மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை பல வழக்குகளில் உள்ளது என்று சுட்டிக் காட்டினார்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அப்போதைய உறுப்பினர் செயலரின் செயல் தவறு மட்டுமல்ல; சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளது என்று தெரிவித்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவுகள் அமல்படுத்தப்படும் என மக்கள் நம்புகின்றனர். அரசு அதிகாரிகள் உயரதிகாரிகளுக்கு மட்டுமல்ல சட்டத்திற்கும் அரசியல் சட்டத்திற்கும் பதில் சொல்லி ஆக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்