

அதிமுகவில் ஊடகப் பிரிவு மாநில செயலாளராகவும், தேசிய செய்தி தொடர்பாளராகவும் இருக்கும் கோவை சத்யன், வெளியிட்ட பதிவுக்கு மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் ஆற்றியுள்ள எதிர்வினை இணையத்தின் கவனத்தை கவர்ந்துள்ளார்.
கோவை சத்யன் தனது உளவியல் பாதுகாப்பின்மை (insecurity) காரணமாக கட்சிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் ஆதரவாக பேசுபவர்களை அமைதிபடுத்த நினைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் காயத்ரி ரகுராம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமை இன்று வெளியிட்ட ஓர் அறிக்கைதான் இந்த சிக்கலுக்கு தொடக்கப்புள்ளியாக இருந்துள்ளது. அதில், "கழகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் கழகத்தின் நிலைப்பாடுகள் குறித்து, கழகத் தலைமையின் ஒப்புதலைப் பெற்று, அதன்பின்னரே பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் இன்னபிற சமூகத் தொடர்பு ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கவும், கருத்துகளைத் தெரிவிக்கவும் வேண்டும். அதேபோல், அறிக்கை ஏதேனும் வெளியிடுவதாக இருந்தால், கண்டிப்பாக தலைமையின் ஒப்புதலைப் பெற்ற பின்னர்தான் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை பகிர்ந்த கோவை சத்யன், "தலைமையின் ஓப்புதல் பெற்ற பின்னரே தொலைக்காட்சி, சமூக ஊடகத்தில் பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிட வேண்டும்." என உத்தரவிட்டு பகிர்ந்துள்ளார்.
இதற்கு எதிராக பதிவிட்ட காயத்ரி ரகுராம், "இதுதான் உங்கள் வேலையா கோவை சத்யன்? TVK-வில் இணைய விரும்பிய ஒரு குழுவுடன் பாதியிலேயே வெளியேறியதாகக் கூறப்படுவது நீங்கள்தானே?
அய்யா (எடப்பாடி பழனிசாமி) இதுபோன்ற விஷம் கக்கும் குணம் கொண்டவர்கள் மீது, குறிப்பாகத் தங்கள் சொந்த இன்செக்யூரிட்டிகளை தலைமை மீது திணித்து, 'யாருக்கும் முக்கியத்துவும் கிடைத்துவிடுமோ' என்று கவலைப்படுபவர்கள் மீது நம்பிக்கை வைப்பதை நினைத்து எனக்கு வருத்தமாக இருக்கிறது.
அரசியல் என்பது மக்களுக்கு சேவையாற்றுவது. தனிப்பட்ட கவனத்துக்காக (attention) போட்டிபோடுவது அல்ல. மக்களின் சார்பாக கேள்விகளை எழுப்ப யாருடைய அனுமதியும் தேவையில்லை.
உண்மையான விசுவாசம் என்பது அய்யாவின் தலைமையை வலுப்படுத்துவதில்தான் உள்ளது; ஒருவரின் சொந்த பாதுகாப்பின்மைகளை கட்சியின் பிரச்சினைகளாகக் காட்டி அதைச் சீர்குலைப்பதில் இல்லை.
நீங்கள் அதிமுகவின் தலைமை பாதுகாப்பின்மையுடன் இருக்கிறது எனக் காட்ட விரும்புகிறீர்களா?.. அப்படியானால் அது எப்படிப்பட்ட வீழ்ச்சி!
ஒருவர் தங்களுடைய பார்வைகளை வெளியில் சொல்ல உங்கள் அனுமதியை ஏன் பெற வேண்டும்? இது ஒரு ஜனநாயக நாடு ஒவ்வொருவருக்கும் தங்கள் உணர்வுகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்த அரசியல்சாசன உரிமை இருக்கிறது.
அதிமுக மற்றும் புரட்சி தமிழர் அய்யாவுக்கு ஆதரவாகப் பேசுபவர்களுக்கு உங்கள் ஒப்புதல் தேவையில்லை.
புரட்சி தமிழர் அய்யாவைப் பாதுகாப்பது போல் நடித்து, அவரை பலவீனமானவராகவும் தன்னம்பிக்கையற்றவராகவும் சித்தரித்து அவரது தலைமைத்துவத்தை சீர்குலைக்கும் நபர்களின் உள்நோக்கத்தை அவர் புரிந்துகொள்வார் என்று நான் மனதார நம்புகிறேன்.
உண்மையான விசுவாசம் என்பது தலைமையை வலுப்படுத்துவதே தவிர, அதற்கு ஆதரவாக நிற்பவர்களை அமைதியாக்குவது அல்ல." என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்