ஜெம் வீரமணி வழக்கில் திடீர் திருப்பமாக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது தமிழ்நாடு அரசு. இரண்டு முக்கிய காவல் அதிகாரிகள் கட்டாயக் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஏ. அருண், ஐ.பி.எஸ்., டாக்டர் என். கண்ணன், ஐ.பி.எஸ். ஆகிய இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் காவல்துறை இயக்குநர் ஏ. அருண், காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் காவல் ஆணையர் கண்ணன், காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வீரமணி வழக்கில் பல கேள்விகள் இருந்தாலும், அக்டோபர் மாதமே வீடியோ கையில் கிடைத்தும் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் பலரும் எழுப்பிய கேள்வி.
நீண்டகாலமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் வீரமணி ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது. இத்தனை ஆண்டுகள் இதனை மறைத்து வைக்க அரசியல்வாதிகள், அதிகாரிகள் பலரும் உதவியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
ஆனாலும், கடந்த ஜூன் மாதம் வழக்கைக் கைவிடும் முடிவை காவல்துறை எடுத்த தகவல் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
வீரமணி குறித்து புகார் வந்தபோது, சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கோவை மாநகர காவல் ஆணையராக இருக்கும் கண்ணன், அப்போது கூடுதல் காவல் ஆணையராக இருந்தார்.
கண்ணனிடம்தான் ஜெம் வீரமணி குறித்த புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஜெம் வீரமணி வழக்கில் இதுவரை எந்தக் காவல் அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், அருண் ஐபிஎஸ் மற்றும் கண்ணன் ஐபிஎஸ் ஆகியோர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற வழக்கில், ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் காவல் ஆணையர் அருண், ஐஜி கண்ணன், உதவி ஆணையர் யாஸ்மின், ஆய்வாளர் மகேஷ்குமார், ராஜலட்சுமி ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இது தொடக்கமாகவே உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க இன்னும் பல அதிகாரிகள் / அரசியல்வாதிகள் சிக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்