

ஜெம் கிரானைட் தொழில் அதிபர் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அரசியல் மற்றும் காவல் அதிகாரிகளின் தலையீடு இருப்பதாக வெளிவந்த செய்திகளால் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த குற்ற செயல்களை மூடி மறைப்பதற்கு பல கோடி பணம் கை மாறியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவின் பாலியல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய புகார் ஒன்று வந்தது. அத்துடன் ஒரு பென்டிரைவ் கிடைத்துள்ளது. தொழில் அதிபர் வீரமணி 6 முதல் 16 வயது சிறுமிகளை, பாலியல் செயல்களில் ஈடுபடுத்திய வீடியோக்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் இருந்த வீடியோவே வந்த வழக்கில் முக்கிய ஆதராமாக மாறியது. ஆரம்பகட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியை வீடியோவில் அடையாளம் காண முடியாததால், வழக்கை முடிப்பதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதை மறுத்த நீதிமன்றம் வழக்கில் மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இப்போது தொடங்கிய விசாரணையில் தேனாம்பேட்டையில், வீரமணி வாடகை வீடொன்றை எடுத்து, சிறுமிகளை ஏமாற்றி செய்து, அவர்களை படிக்கவைப்பதாகவும், புத்தாடை மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து இந்த கொடூர சம்பவங்கள் அரங்கேறியது தெரியவந்தது. விசாரணை தீவிரமடைந்த நிலையில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர். வீரமணி கைது செய்யப்பட்டார். மேலும் வீரமணியின் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் சிறுமிகளின் பாலியல் வீடியோக்களை வைத்திருந்ததாக வீரமணியின் உதவியாளர் கணேசன் என்ற நபரும் கைது செய்யப்பட்டார். இவரது வாங்கி கணக்கில் இருந்தே வழக்கை முடித்து வைப்பதற்காக சுமார் 70 கோடி ரூபாய் பணம் கைமாறியுள்ளது தெரியவந்தது. அதற்காக ECR-ல் உள்ள வீரமணியின் நிலம் ஒன்று விற்கப்பட்டதும், அது நேரடியாக அவரது உதவியாளர் கணேசனின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டது தெரியவந்தது.
SRMU தலைவர் கண்ணையாவின் மகன் பிரகாஷ்க்கு லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பப்படுள்ளது. இவர் உதவியாளர் கணேசனுடன் தொடர்பில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் பணம் கைமாறியதற்கான ஆதாரம் அல்லது சிறுமிகளின் வீடியோ உள்ளதா? என விசாரணை நடத்தப்பட உள்ளது. வீரமணி மீது தொடரப்பட்ட பாலியல் வழக்கு தொடர்பாக, சென்னை காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணை சம்மன் அனுப்பியுள்ளது. அதில் விபச்சார தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மகேஷ் குமார், காவல் ஆய்வாளர் ராஜலக்ஷ்மிக்கு சம்மன், உதவி ஆணையர் யாஸ்மின் ஆகியோரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது மத்திய குற்றப்பிரிவு. கடந்த அக்டோபரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது ஏன்? என விளக்கமளிக்குமாறும் தெரிவித்துள்ளது.
விசாரணை முடிவுக்கு கொண்டுவரப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து அவர்களிடம் விளக்கம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, வீரமணியுடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரகாஷ் உள்ளிட்ட சில முக்கிய நபர்களிடமும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரகாஷுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும், பணப் பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் ஆய்வு செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிரகாஷ் வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரை இந்தியா திரும்பும்போது கண்காணிக்க Look Out notice நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீரமணி மீதான வழக்கு மட்டுமின்றி, ஆரம்பகட்ட விசாரணை எப்படி நடைபெற்றது? வழக்கை முடிக்க முயற்சி நடந்ததா? பணப் பரிமாற்றங்களின் பின்னணி என்ன? என்ற கேள்விகளையும் மையமாக வைத்து விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தற்போது விசாரணையில் உள்ள நிலையில், ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்த திருப்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பல முக்கிய புள்ளிகள் சிக்க கூடும் என்றே சொல்லப்படுகிறது. இதுகுறித்து, சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதையடுத்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், பெருநகர சென்னை காவல் ஆணையர் அமல்ராஜை சந்தித்து, வழக்கை மூடிமறைக்கவோ, தாமதப்படுத்தவோ முயன்ற நபர்கள் மற்றும் குற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒருவரையும் விடாமல் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். சுமார் இரண்டு நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலின்போது, ஆணையர் வழக்கில் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து அவருக்கு விளக்கினார். மேலும் இந்த வழக்கை நேரடியாக முதல்வர் கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்